மேகதாது அணை மீதான தீர்மானம் | நயினார் நாகேந்திரன் சொன்ன பதில்!
மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் தொடர்ந்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்கிறது என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். மாநிலம், மத்தியில் என எங்கு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் தமிழுக்கு விரோதமாக செயல்படுகிறது என்றார். இப்படிப்பட்ட கட்சிக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்த ஜோசப் விஜய்க்கும் தமிழக மக்களிடம் அக்கறை இல்லை என விமர்சித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஆளுநர் உரை சம்பந்தமாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த நயினார்,ஆளுநர் உரை என்பது ஒரு அரசு தயாரித்து கொடுக்கக்கூடிய அறிக்கையை அப்படியே படிப்பது தான் ஆளுநர் வேலை. அதனுடைய அடிப்படையில் அவர் அந்த அறிக்கையை படித்துள்ளார். தேசத்தின் நலன் கருதி தேச ஒற்றுமைக்காக இந்த மாநில அரசின் முடிவுகள் வரவேற்கப்பட வேண்டியவை. மத்திய அரசு மற்றும் தமிழக மக்களின் நலனுக்கு எதிராக நடவடிக்கை இருந்தால் அது தவறானது.
மேகதாது அணை விவகாரத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் சம்பந்தமாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பிடித்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது, தமிழ் மக்களுக்கு விரோதமான நடவடிக்கையில் காங்கிரஸ் தான் ஈடுபட்டு வருகிறது. அது மாநில அரசாக இருந்தாலும் சரி, மத்தியில் காங்கிரஸ் இருந்தாலும் சரி தமிழகத்துக்கு விரோதமாக செயல்படுகிறது. காங்கிரஸ் தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்த கட்சியாகவே உள்ளது. தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டது நல்ல விஷயம் தான்.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக மக்களுக்கு காங்கிரஸ் தொடர்ந்து துரோகம் செய்து கொண்டே இருக்கிறது. துரோகம் செய்த கட்சிக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தது ஜோசப் விஜய். இவருக்கும் தமிழக மக்கள் மீது அக்கறையில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது என்று பேசியுள்ளார்.

