nagore hanifa
நாகூர் ஹனிபாweb

”இறைவனிடம் கையேந்துங்கள்..” மதங்கடந்த மனிதநேயக் குரலுக்கு நூற்றாண்டு.. நாகூர் ஹனீபா பிறந்த நாள்!

மதங்களை கடந்த பாடல்களுக்கு சொந்தக்காரரான கம்பீரக்குரலோன் இசை முரசு நாகூர் ஹனீபா பிறந்த தினம் இன்று.
Published on

கட்டுரையாளர்: புதுமடம் ஜாபர் அலி

நாகூர் ஹனிபா என்றதும் அவரது கம்பீரக்குரலும், பாடல்களும் தானாகவே காதில் ஒலிக்கும். ‘இறைவனிடம் கையேந்துங்கள்… அவர் இல்லையென்று சொல்லுவதில்லை!’ என்ற பாடல், மதங்களைக் கடந்து அனைத்து தரப்பினரினருக்கும் தெய்வீக அனுபவத்தைத் தரும் என்றால்… ‘ஓடி வருகிறான்… உதய சூரியன்…’, ‘கல்லக்குடி கண்ட கருணாநிதி வாழ்கவே’ போன்ற பாடல்கள் திமுக-வினரின் நாடி நரம்பெல்லாம் புடைக்கச் செய்து, வீறுகொண்டு எழ வைக்கும்.

சினிமா ரசிகர்களுக்கும் அவர் குறைவைக்கவில்லை. ‘பாவ மன்னிப்பு’ திரைப்படத்தின் ‘எல்லோரும் கொண்டாடுவோம்’ பாடலில் டி.எம்,எஸ்ஸுடன் இணைந்த ஹனிபாவின் குரல், ‘செம்பருத்தி’யில் ‘நட்ட நடு கடல் மீது’, ‘ராமன் அப்துல்லா’வில் ‘உன் மதமா என் மதமா ஆண்டவன் என்ன மதம்?’ போன்ற பாடல்கள் வழி பெரும் வரவேற்பையும் புகழையும் பெற்ற குரல் அவருடையது.

nagore hanifa
'செருப்பு அணியக் கூடாது' ஒடுக்குமுறைகளை ஒடுக்கிய புரட்சியாளர் அய்யன்காளி!

பொதுவாழ்க்கை…

இப்படி பல துறைகளிலும் அவர் பங்களித்திருக்கிறார் என்றாலும், அவரது பங்களிப்பின் உச்சம் பொதுவாழ்க்கைதான். சுயமரியாதை இயக்கத் தொண்டராய், இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரராய் தம் அரசியல் வாழ்வைத் தொடங்கி நீதிக்கட்சி, திராவிடர் கழகத்தில் பயணித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர். திமுக பொதுக்கூட்டம், மாநாட்டுக்கு வரும் தொண்டர்களை வரவேற்று அமர வைத்ததும்கூட ஹனிபாவின் சிம்மக் குரல்தான். கடந்த 70 ஆண்டுகளில் திமுக-வின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு, பொதுக்கூட்டம் போன்றவை அந்தக் குரலிசையில்லாமல் தொடங்கியதே இல்லை.

நாகூர் ஹனிபா
நாகூர் ஹனிபா

இந்தி எதிர்ப்புப் போராட்டங்களுக்கு உணர்வெழுச்சி ஊட்டிய பாரதிதாசனின் பாடல்களான ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழுங்கு’, ‘தமிழுக்கு அமுதென்று பெயர்’ ஆகியவற்றைப் பாடி அந்தக் காலத்தில் இந்தி எதிர்ப்பில் பிரசார வானொலியாக இருந்தவர் ஹனிபா. பதின்மூன்று வயது சிறுவனாக இருந்தபோதே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்ற தமிழுணர்வாளர். தொடர்ந்து 70 ஆண்டுகள் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகள் வழி தமது குரலைக் காற்றலைகளில் தவழச் செய்த அந்தக் கண்ணிய ஆளுமையின் நூற்றாண்டு இது!

nagore hanifa
பாஜக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறுமா?.. அமைச்சர் சிவசங்கர் விமர்சனத்திற்கு ஜிகேமணி பதில்!

பிறப்பும் வளர்ப்பும்!

முஹம்மது இஸ்மாயில் - மரியம் பீவி தம்பதியினருக்கு மூன்றாம் மகனாக 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 25இல் பிறந்தார், நாகூர் இஸ்மாயீல் முஹம்மது ஹனிபா என்கிற இசைமுரசு முஹம்மது E.M.ஹனிபா. அவரது தாயார் ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தைச் சேர்ந்தவர். அவர் பிறந்தது ராமநாதபுரம்தான். அவரின் தந்தை நாகூரைச் சேர்ந்தவர் என்பதால் சிறு வயதில் குடும்பத்தினர் நாகூருக்கு மாறிவிட்டார்கள். எனவே, அவரின் பெயருடன் நாகூர் ஒட்டிக் கொண்டது.

நாகூர் அரசுப் பள்ளியில் படித்தபோதே பாடத் தொடங்கிவிட்டார் ஹனிபா. இஸ்லாமியர் வீட்டுத் திருமணங்களில் மாப்பிள்ளை அழைப்பின்போது தப்பு (வட்டப்பறை) தட்டி இஸ்லாமியப் பாடல் பாடி அழைத்துவரும் வழக்கம் இன்றுவரை முஸ்லிம் கிராமங்களில் உண்டு. அப்படிநாகூரின் பைத்து சபையில் பாடியபோது, ஹனிபாவின் குரலுக்குத் தனி மரியாதை கிடைத்துவந்தது.

நாகூர் ஹனிபா
நாகூர் ஹனிபா

பாடகராக இருப்பதில் ஆர்வம் காட்டினார்; படிப்பில் கவனம் இல்லாது இருந்தார். இப்படியே இருந்தால் பிள்ளை கெட்டுவிடுவான் என்ற பயத்தில் தாயார் அவரின் சிறிய தந்தை அபுபக்கர் திருவாரூரில் நடத்திய மளிகை கடைக்கு அவரை அனுப்பினார்.

nagore hanifa
5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து! மத்திய அரசு அறிவிப்பு!

திமுக-வில் ஹனிபா!

திருவாரூரில் நீதிக் கட்சியின் பொதுக்கூட்டங்களுக்குப் பார்வையாளராகச் சென்றவருக்கு அந்தக் கொள்கையில் ஈடுபாடு ஏற்பட்டது. திருவாரூரில் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவர்கள் சிங்கராயர், ரெங்கராஜ், இராமன், கலைஞர் கருணாநிதி போன்றோர். ஆகவே அவர்களுடன் ஹனிபாவும் கட்சி வேலையில் ஈடுபடத் தொடங்கினார். நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாறியது. அதன்பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பேரறிஞர் அண்ணா தொடங்கியபோது, அதில் இணைந்தார்.

நாகூர் ஹனிபா அவர்களைப் பற்றி 1993ஆம் ஆண்டு ‘முத்து விழா’ மலரில் கலைஞர் அவர்கள் தமது நினைவலைகளில் பின்வருமாறு எழுதியுள்ளார்: “அரசியலில் நான் அடியெடுத்து வைத்து சிறு பிராயம் தொட்டு நாகூர் ஹனீபாவை அறிவேன். அன்று கேட்ட அதே குரல்! வளமிக்க குரல்! அனைவரையும் வளைக்கும் குரல்! ஆதிக்கக்காரர்களின் செவிப்பறை கிழிக்கும் இடியோசைக் குரல்! அந்தக் குரல் மட்டுமா இன்றளவும் நிலைத்து நிற்கிறது… அவர் நெஞ்சில் பதித்த கொள்கை உறுதியுமன்றோ ஆடாமல் அசையாமல் அப்படியே நிலைத்து நிற்கின்றது!”. அது உண்மைதான், திமுக- பாஜகவுடன் உறவு வைத்தபோதும், கட்சியைவிட்டு அவர் விலகவில்லை. எனக்கு ஒரே இறைவன்... ஒரே கட்சி! என்றே வாழ்ந்தார்.

திமுக-வில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர், வக்பு வாரியத் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர். தி.மு.க. தேர்தல் அரசியலில் கண்ட முதல் தேர்தலிலேயே (1957), நாகப்பட்டினம் தொகுதியில் ஹனிபாவை வேட்பாளராக நிறுத்தினார் அண்ணா. 2001-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வாணியம்பாடி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தினார் கருணாநிதி. இந்த இரு தேர்தலிலும் அவர் வெற்றிபெறாமல் போனாலும், மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி) அவரை சட்டசபைக்கு அனுப்பிவைத்தது திமுக!

திராவிடத் தலைவர்களைத் தாண்டி கண்ணியமிகு காயிதே மில்லத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் ஹனிபா. இவரது பாடல்களின் ரசிகர் காயிதே மில்லத்.

1941இல் 15 வயதில் மேடைக் கச்சேரி செய்யத் தொடங்கிய ஹனிபா தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகில் தமிழ்ப் பெருமக்கள் வாழும் எல்லாப் பகுதிகளிலும் தமது குரலை ஒலிக்கவிட்டவர். அரசியல் கூட்டங்கள், மாநாடு, மீலாது விழாக்கள், மத மாநாடுகள், திருமண நிகழ்ச்சிகள் என்று மக்கள் கூடுமிடங்களில் எல்லாம் அவரது கணீர்க் குரல் கம்பீரமாக ஒலித்தது; ஒலிக்கிறது; ஒலிக்கும். வட்ட வடிவ ஒலித் தகட்டில் தொடங்கிய அவரது குரல் இணையம், சமூக வலைத்தளங்கள் வளர்ச்சிபெற்ற இந்தக் காலத்தில் கைபேசிவரை வந்து தமிழர்களை உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது. காற்றலை தவழும்வரை சாதி, மத, அரசியல் பிணக்குகளைக் கடந்த மனித நேயக் குரலாக ஹனிபாவின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்!

nagore hanifa
மீண்டும் ஒரு நிஜ கதாபாத்திரமா..? தனுஷ் உடனான அடுத்த படக் கதை? அமரன் இயக்குநர் ஸ்பெசல் அப்டேட்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com