'செருப்பு அணியக் கூடாது' ஒடுக்குமுறைகளை ஒடுக்கிய புரட்சியாளர் அய்யன்காளி!

'செருப்பு அணியக் கூடாது' ஒடுக்குமுறைகளை ஒடுக்கிய புரட்சியாளர் அய்யன்காளி!
'செருப்பு அணியக் கூடாது' ஒடுக்குமுறைகளை ஒடுக்கிய புரட்சியாளர் அய்யன்காளி!

கேரள மண்ணில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய புரட்சியாளர் அய்யங்காளியின் 159 வது பிறந்த நாளான ஆகஸ்ட் 28 ஆம் தேதியான இன்று அவரது போராட்டங்களையும், பணிகளையும் சிறு தொகுப்பாய் பார்ப்போம்.

அய்யன்காளி பற்றி தெரிந்துகொள்ளும் முன் ஒரு கவிதையை வாசித்துவிட்டு போவோம்.

புழுக்கமாய் இருந்தாலும்
பரவாயில்லை
பூட்ஸை அணிந்துகொள்.!

எவ்வளவு நேரமானாலும்
பரவாயில்லை
மேலத்தெரு வழியாகவே
பள்ளிக்குப் போ.!

அங்குதான்
காலணி அணிந்ததற்காய்
கட்டிவைத்து அடித்தார்கள்
உன் அப்பனை.!

சாதியை எவர் ஒழித்தார் என்று கேட்டால் யாரும் ஒழிக்கவில்லை. ஆனால் அதன் மீதான அடக்குமுறையை கேட்டாலே கண்கள் கலங்கும் மனித நேயம் கொண்டவர்களுக்கு மட்டும். அப்படி சாதி அடக்குமுறையை எதிர்த்து தனி ஒரு மனிதனாக புரட்சியை ஏற்படுத்தியவர் தான் அய்யன்காளி.

புலயர் என்று புறம் தள்ளியவர்களை புடரியில் அடித்த புரட்சியாளர் அய்யன்காளி பற்றி கேரள திருவிதாங்கூர் சமஸ்தானம் என்ற வரலாற்றை புரட்டி பார்த்தால், அங்கே ஒளிந்திருக்கும் அய்யன்காளியின் புரட்சி வரலாறு.

தமிழகத்தை விட கேரளாவில் சாதிய வன்கொடுமை அதிகம் நிலவிய காலத்தில், மாட்டுவண்டி வீதி போராட்டம், சாலியர் வீதி கலகம், பள்ளி நுழைவு போராட்டம், நெடுமங்காடு சந்தை போராட்டம் மற்றும் கேரளாவின் முதல் தொழிலாளர் போராட்டம் என அடக்குமுறைக்கு எதிராக இவர் செய்தவற்றை பட்டியலிட்டு கொண்டே போகலாம்.

உயர் சாதி வீதிகளில் கீழ் சாதி நுழைய அனுமதி இல்லாத காலம். கேரளாவின் முலைச்சேரியின் வரலாற்று பின்னோட்டத்தை கண்டால் கேரளாவின் சாதிய கொடுமைகளை காண முடியும்.

அய்யன்காளி

அய்யன் காளி ஆகஸ்ட் 28, 1863ல் திருவிதாங்கூரில் (கேரளா) திருவனந்தபுரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெங்கனூரில், பெருங்காட்டுவிளா என்ற ஊரில் கூலி விவசாய குடும்பத்தில் அய்யன் என்பவருக்கு மகனாக பிறந்தார்.

சாதி கொடுமைகள்

அய்யன்காளி சிறுவனாக இருக்கும் போது தனது குடும்பத்தினரும், உறவினர்களும் உரிமை மறுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுவதை உணர்ந்தார். புலையர் சாதியில் பிறந்த அவர்களுக்கு சாலையில் நடக்க அனுமதியில்லை, செருப்பு போட அனுமதியில்லை, உடலை மறைக்க நல்ல உடையணிய அனுமதி மறுக்கப்பட்டது. மற்றும் தலைப்பாகை கட்டக்கூடாது என பல அடக்குமுறைகளை அனுபவித்தனர்.

கீழ் சாதி அடுக்கில் கீழே இருந்ததால் அவர்களை ஏரில் பூட்டி வயலை உழவு செய்யுமாறு கட்டாயப்படுத்தினர். நாயர்களும், நம்பூதிரிகளும் இவர்களை அடிமைகளாக நடத்தினர். மேலும் பட்டியல் இனத்தவருக்கு கல்வி கற்க உரிமை மறுக்கப்பட்டது, பொதுத் தெருவில் சரிசமமாக நடமாடும் சுதந்திரம் பறிக்கப்பட்டது, பெண்கள் மேலாடை அணிய அனுமதிக்கப்படாமல் அரை நிர்வாணமாய் இருக்க கட்டாயப்படுத்தப்பட்ட கொடுமைகள் நிகழ்த்தப்பட்டது.

அய்யன்காளி போராட்டங்கள்

அய்யன்காளி வளர்ந்த காலகட்டத்திலும் அதே நிலைமை தான் நீடித்திருந்தது. அப்பொழுது தான் உயர்சாதி தெருவில் நுழையும் போராட்டத்தை தனிமனிதனாக தொடங்கினார் அய்யன்காளி. குணிந்தோ கெஞ்சியோ இல்லை கம்பீரமாக மாட்டு வண்டி கட்டி, மாட்டின் கழுத்தில் சலங்கை கட்டிவிட்டு, வீரமாக தலைபாகை கட்டிக்கொண்டு வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை மற்றும் தோளில் துண்டுடன் தாழ்த்தப்பட்டவர்கள் நடக்க மறுக்கப்பட்ட வீதிகளில் ஒலி எழுப்பியவாறு மாட்டு வண்டியில் அனைத்து உயர் சாதியினரும் பார்க்குமாறு சென்றார்.

நடக்கவே கூடாது என்ற வீதிகளில் அய்யன்காளி ஓட்டிவந்த மாட்டு வண்டியின் மணி சத்தம் கேட்டு அய்யன் காளி வருகிறார் என ஆத்திரம் கொல்ல வைத்தவர், தன்னை தன் சமூகத்தை நடக்க விடாத வீதியில் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி “சுதந்திரம் ஊர்வலம்” நடத்தி புரட்சி செய்து அதில் வெற்றியும் கண்டார் அய்யன்காளி.

பின்னர் பல அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தார். மற்றும் சாதி வேறுபாடுகளை களைய பாடுபட்டார். பள்ளி நுழைவு போராட்டம், நெடுமங்காடு சந்தை போராட்டம் மற்றும் கேரளாவின் முதல் தொழிலாளர் போராட்டம் என பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.

பதவி

படிக்காதவரும், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளையும் பேசுபவருமான அய்யன்காளி, 1911 ல் மக்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்.

சிறப்பு

1980 ஆகஸ்ட் 10ல் பிரதமர் இந்திராகாந்தி அய்யன்காளியின் சிலையை திருவனந்தபுரத்தில் திறந்து வைத்தார்

இந்திய மறுமலர்ச்சி என்னும் பக்கங்களில் அய்யன்காளி என்னும் பெயர் நிச்சயம் தனித்துவமான இடத்தில் இருக்கும். இந்திய மறுமலர்ச்சியாளரான அய்யன்காளியை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.

-வேங்கையன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com