நாகை: சினிமா பாணியில் பேருந்தை தள்ளிச் சென்ற பயணிகள்... பழுதில்லா பேருந்துகளை இயக்க கோரிக்கை!
செய்தியாளர்: என்.விஷ்ணுவர்த்தன்.
நாகை மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் சிகிச்சைகாக செல்கின்றனர். மருத்துவமனைக்கு வரும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக மருத்துவக் கல்லூரிக்கு காலை முதல் இரவு வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் கடந்த சில நாட்களாக மருத்துவக் கல்லூரிக்கு உரிய நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை எனவும், 'மருத்துவக் கல்லூரி செல்லும் பேருந்தில் போதுமான பயணிகள் இல்லை' எனக் கூறி பல பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன எனவும் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், நேற்றிரவு மருத்துவக் கல்லூரி செல்ல பலரும் பேருந்துக்காக காத்திருந்தனர். உரிய நேரத்தில் பேருந்து வராததால் பயணிகள் கேள்வியெழுப்பியதை அடுத்து வேளாங்கண்ணி செல்ல வேண்டிய பேருந்து மருத்துவக் கல்லூரிக்கு இயக்கப்பட்டது.
அப்போது பயணிகளை ஏற்றியதும், ஓட்டுநர் பேருந்தை இயக்க முற்படும்போது, பேருந்தின் இன்ஜின் இயங்கவில்லை. பின்னர் பயணிகள் உதவியுடன் சினிமா பாணியில் ‘தள்ளு தள்ளு’ என முன்னும் பின்னும் பயணிகள் பேருந்து தள்ளிய பிறகு ஒருவழியாக இன்ஜின் இயங்கத் தொடங்கியது. இதன்பின் பேருந்து மருத்துவக் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றது. இதைத் தொடர்ந்து பழுதில்லா பேருந்துகளை நேரத்திற்கு இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.