நாகை | இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து – 3 இளைஞர்கள் உயிரிழப்பு
செய்தியாளர்: என்.விஷ்ணுவர்த்தன்
நாகை ஜெகநாதபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த ஆனந்தராஜ், சென்னையைச் சேர்ந்த கார்த்தி ஆகியோர் நாகூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றனர். ஆழியூர் பிரிவுச் சாலையில் சென்றபோது எதிரே கூத்தூர் வண்ணான்குளம் பகுதியைச் சேர்ந்த வினோத்பாபு, அவரது மனைவி சிந்து பைரவி ஆகியோர் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது, இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த கார்த்தி மீது லாரி ஏறி இறங்கியுள்ளது.
இந்த விபத்தில் கார்த்தி, வினோத்பாபு ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஆனந்தராஜ், சிந்து பைரவி ஆகியோரை அப்பகுதியில் இருந்தவர்கள்; மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே ஆன்ந்தராஜ் உயிரிழந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிந்துபைரவி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேணுகோபால் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திர மூர்த்தி ஆகியோர் உயிரிழந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.