'J.V எனும் நான்’.. தவெக கையில் எடுத்த வியூகம்.. சேலத்தில் இருந்து துவங்கிய கணக்கு!
தங்களது செயற்குழுவில் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்று தீர்மானம் நிறைவேற்றிய தவெக, தேர்தல் பிரச்சாரத்தையும் கையில் எடுத்திருக்கிறது. சேலத்தில் நடந்து முடிந்த முதல் மாநில கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், புது திரியை கொளுத்திப்போட்டார். விஜய் என்று உச்சரிப்பார் என்று தொண்டர்கள் அனைவரும் எதிர்பார்க்க, வித்தியாசமாக 2 எழுத்துக்களை உச்சரித்து முடித்தார் ஆனந்த். அந்த இரண்டு எழுத்துதான் இப்போது டாக் ஆஃப் தி டவுன்.. தவெக கையில் எடுக்கும் வியூகம் என்ன என்று விரிவாக பார்க்கலாம்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக முழு வீச்சில் தயாராகி வருகிறார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். அதன்படி, தனது சுற்றுப்பயணத்திற்கு முன்பாக, 5 மண்டலங்கள், 120 மாவட்டங்கள் மற்றும் 12,500 கிளைக்கழகங்களில் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தை நடத்து வேண்டும் என்று கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அக்கட்சியின் முதல் மாநில கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம், கடந்த 21ம் தேதி சேலத்தில் நடைபெற்றது.
கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில், தலைவர் விஜய்யைத் தவிர மாநில நிர்வாகிகள் அனைவரும் PRESENT ஆகினர். இரண்டரை மணி நேரத்திற்கு நீடித்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் அனைவருக்குமே பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை உறுதிபடுத்தவும், விஜய்தான் தங்கள் முதல்வர் வேட்பாளர் என்பதை முன்னிறுத்தி முழங்கவுமே இந்த கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிந்தது.
அந்த வகையில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய் என்ற பிரச்சாரத்தை, அனைவரின் பேச்சிலுமே பார்க்க முடிந்தது. அந்த கூட்டத்திற்கு முன்தினம் வெளியான கட்சியின் அறிவிப்பில், 'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்யின் உத்தரவின் பேரில் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து, தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சூழலில், மாநாடு சம்பந்தமாக அடிக்கும் பேனர்கள், போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களில் 'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய்!' என்ற வாசகத்தை அதிகமாக பயன்படுத்தும்படி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இப்படியாக, சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசித்தொடங்கிய ஆனந்த், ‘மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் மாண்புமிகு JV' என்று சூசகமாக பேசினார். விஜய் என்ற பெயரைத் தான் உச்சரிப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்க, JV என்றதோடு, தளபதி என்றும் முடித்தார் ஆனந்த்.
இதனைத் தொடர்ந்தே, JV என்ற இந்த இரண்டு எழுத்து சமூகவலைதளங்களில் பேசுபடுபொருளாக மாறியுள்ளது. JV என்றால் ஜனநாயகன் விஜய்.. ஜோசப் விஜய் என்ற இரு அர்த்தங்களை குறிப்பதாக பலரும் பதிவிடுகின்றனர். விஜய்யை அரசியலுக்கு அழைத்து வந்ததில், அவரது மத அடையாளத்தை வைத்து பாஜக பிரச்னை உண்டாக்கியதும் முக்கிய பங்கு வகித்தது. அந்த வகையில்தான் ‘ஜோசப் விஜய் எனும் நான்’ என 2026ம் ஆண்டு வெற்றிபெற்று விஜய் முதல்வர் ஆவார் என்ற தொணியில் பேசியிருக்கிறார் ஆனந்த்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய மாநில நிர்வாகி கேத்ரின், அண்ணன் விஜய் 2026-ல் ஜார்ஜ் கோட்டையில், ஜோசப் விஜய் எனும் நான் என்று உறுதி எடுக்கும் வரை நாம் அனைவரும் ஓயாமல் களப்பணி செய்ய வேண்டும் என்று பேசினார். ஆக, எந்த சிறுபான்மை சமூக அடையாளத்தை வைத்து குறிவைக்கப்பட்டாரோ அதே அடையாளத்தோடு அவர் முதல்வராவார் என்ற நோக்கத்திலேயே இந்த பரப்புரை கையில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க தவெகவினரும் பரப்புரையை கையில் எடுத்துள்ளனர்.