”இஸ்லாமிய, கிறிஸ்தவர்களை வில்லனாக காட்டுவது ஏன்?” - சீமானுக்கு கேள்விகளை அடுக்கும் ஆளூர் ஷாநவாஸ்!

"அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு தான் இஸ்லாமியர்கள் வாக்களித்துள்ளார்களே தவிர மொத்தமாக ஒரு கட்சிக்கு மட்டுமே வாக்களிப்பது என்ற அணுகுமுறை இல்லை"
seeman, shanavas
seeman, shanavaspt web

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

”இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சாத்தானின் குழந்தைகளாக மாறிவிட்டார்கள்”

அந்தக் கூட்டத்தில் பேசிய சீமான், "ஏதோ ஒரு ஓரத்தில் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதுல நமக்கு ஒரு லாபமும் இல்லை. மணிப்பூரில் இருக்கும் கிறிஸ்தவர்களும் ஓட்டுப்போடப் போறதில்லை... இங்க இருக்க கிறிஸ்தவர்களும் ஓட்டுப்போடப் போறதில்லை. நாம நினைச்சுக்கிட்டிருக்கோம், இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் தேவனின் குழந்தைகள்னு. ஆனா, அது சாத்தானின் குழந்தைகளாக மாறி பல வருடங்களாகிவிட்டது.

இந்த நாட்டில் நடந்திருக்கும் அநீதிக்கும் அக்கிரமத்திற்கும் பெரிய பொறுப்பேற்க வேண்டியவர்கள் இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள்தான். தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் 18% வாக்குகளை தி.மு.க.வுக்குப் போட்டு, காங்கிரசுக்குப் போட்டு நாட்டை தெருவில் போட்டது இவர்கள்தான். சகிக்க முடியாத ஊழல், லஞ்சம், சீரழிவான நிர்வாகம் ஆகியவற்றுக்குக் காரணம் இவர்கள்தான். இவர்களிடம் போய் என்ன பாவத்தை ஒப்புக்கொடுப்பது. பாவத்தையே பெரும்பான்மையாக அவர்கள்தானே செய்கிறார்கள்?" என்று பேசினார். பல்வேறு அரசியல் தலைவர்களும் சீமானின் இந்த கருத்துக்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

”இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தி.மு.க. செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள், நான் கட்சியை கலைத்துவிட்டுப் போகிறேன்”

இத்தகைய சூழலில் செய்தியாளர்களைச் சந்திப்பின்போது அவரது பேச்சு மீது எழுந்த விமர்சனங்கள் குறித்து கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தொடர்ச்சியாக 18% வாக்கை தி.மு.க. காங்கிரசிற்குப் போடுகிறார்கள். பிறகு மாற்றம் எப்படி வரும்? எதிர்க்கட்சியாக இருக்கும்போது இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்வதாகச் சொல்வார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு செய்ய மாட்டார்கள். எங்களுக்கு உரிமை இருக்கிறது, ஆதங்கம் இருக்கிறது என்பதால் சொல்கிறோம். இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தி.மு.க. செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள், நான் கட்சியை கலைத்துவிட்டுப் போகிறேன். நான் எவ்வளவோ பேசியிருக்கிறேன், அதையெல்லாம் விட்டுவிட்டு, சாத்தானின் பிள்ளைகள் என்று பேசிவிட்டாரே என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்," என்று விளக்கம் கொடுத்தார். இதனையடுத்து திமுக தரப்பினருக்கு சீமானின் பேச்சுக்கு தங்களது எதிர்வினைகளை ஆற்றி வருகின்றனர். இஸ்லாமியர்களுக்கு திமுக அரசு செய்துள்ளவை என்று ஒரு பட்டியலையும் வெளியிட்டு வருகிறார்கள்.

seeman
seemanpt desk

இந்நிலையில் புதிய தலைமுறையின் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் நாகப்பட்டினம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷாநவாஸை தொடர்பு கொண்டோம்.

அவர் கூறுகையில், “காங்கிரஸ், திமுகவிற்கு மட்டுமே இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் வாக்களிப்பதாக விமர்சித்துள்ளார். கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் பார்க்கும் போது அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு தான் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் வாக்குகளை செலுத்தியுள்ளார்கள். இதே திமுக பாஜக உடன் கூட்டணி வைத்த போது இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் திமுகவிற்கு வாக்களிக்கவில்லை. சிறும்பான்மையினர் நலனுக்காக பாடுபடும் எந்த அரசியல் கட்சியும் அப்போது திமுக உடன் அணி சேரவில்லை. காலங்காலமாக திமுக உடன் பயணித்த முஸ்லீம் லீக் கூட திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டது.

1999 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் திமுகவிற்கு வாக்களிக்கவும் இல்லை. அணி சேரவும் இல்லை. 2001 சட்டமன்ற தேர்தலிலும் திமுகவிற்கு வாக்களிக்கவில்லை. திமுக உடன் அணி சேரவில்லை. பாஜக உடனான கூட்டணியை திமுக முறித்துக் கொண்ட பின்பே திமுகவிற்கு மக்கள் வாக்களித்துள்ளனர். இதைத்தான் கடந்த காலங்களில் நாம் பார்த்துள்ளோம். 2001, 2011 தேர்தல்களில் அதிமுகவிற்கும் வாக்களித்துள்ளார்கள். அதே ஜெயலலிதா மதமாற்றத் தடைச் சட்டம், ஆடு கோழி பழியிட தடைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள், இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக கருத்து சொன்னது ஆகியவற்றையெல்லாம் வைத்து 2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக வாக்களித்தார்கள்.

சீமான்
சீமான்

அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு தான் இஸ்லாமியர்கள் வாக்களித்துள்ளார்களே தவிர மொத்தமாக ஒரு கட்சிக்கு மட்டுமே வாக்களிப்பது என்ற அணுகுமுறை இல்லை என்பதற்கு இதெல்லாம் சான்றுகள்.

அதேபோல் உத்தரப்பிரதேசத்தில் மாயாவதிக்கும், அகிலேஷ் யாதவிற்கும், பீகாரில் தேஜஸ்விக்கும், லாலு பிரசாத் யாதவிற்கும் கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கும் வாக்களித்துள்ளார்கள். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் தெலுங்கானாவில் கே.சி.ஆர் இஸ்லாமியர்கள் வாக்குகளை பெற்றுள்ளார். வாக்களித்துள்ளார்கள். காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே வாக்களித்துள்ளார்கள் என்பதே முதலில் தவறான பார்வை. மேற்கண்ட கட்சிகள் எல்லாம் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களா இல்லையே. கேரளாவிலும் மாறி மாறிதான் கூட்டணி அமைகிறது. சீமான் சொல்வது போல் எங்கும் அப்படி இல்லை. பிஜேபிக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

பாஜகவே இந்த வாக்குகள் வேண்டாம் என வெளிப்படையாக அறிவிக்கிறது. கர்நாடகத்தில் பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, ஒரு இஸ்லாம் வாக்கு கூட தேவையில்லை மிக வெளிப்படையாக சொன்னார். அப்படி அறிவிப்பதற்கான பின்னணி என்ன? சிறும்பான்மையினரை எதிரியாக காட்டு பெரும்பான்மை வாக்குகளை வாங்கலாம், பெரும்பான்மை வாக்குகள் தான் முக்கியம், அந்த வாக்குகளை திரட்டுவதற்கான அரசியலை செய்வோம் என அந்த அரசியலை நோக்கி செல்கிறார்கள். அப்படி இருக்கும் போது இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் பெரும் பாவம் செய்தவர்கள் போல் , நடக்கக்கூடிய தீங்குகளுக்கு அவர்கள் துணை போவது போலவும் அவர்கள் தான் காரணம் என்பது போலவும் ஒரு சித்திரத்தை ஏற்படுத்த முயல்வது என்பது பாஜக இவர்கள் வேண்டாம் என்று சொல்லி செய்த அரசியலை இவர் வேறொரு பார்வையில் முன்வைக்கிறார்.

பாஜகவிற்கு எதிராக அகில இந்திய அளவில் அணி திரட்சி நடக்கிறது. பாஜக ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வேட்டு வைக்கும் செயலில் ஈடுபடும் போது அதை உணர்ந்த கட்சிகள் கருத்து வேற்றுமைகளை கடந்து ஒருங்கிணைந்துள்ள சூழல் உள்ளது. பாஜகவிற்கு எதிராக பெரும்பான்மையினரை திரட்டும் அரசியல் செயல்திட்டம் நடந்து கொண்டிருக்கும் போது இங்கு சிறும்பான்மையினரை வில்லனாக காட்டும் ஒரு அரசியலை எதற்கு இவர் முன்வைக்க வேண்டும் என்பது பெரிய கேள்வி.

பாமகவிற்கு ஏன் 6% வாக்களித்தீர்கள் அவர் அதை வைத்துக்கொண்டு மக்களுக்கான அரசியலையா செய்கிறார்? அந்த வாக்குகளை எனக்கு செலுத்துங்கள்? பாமகவிற்கு வாக்களித்த சமூகத்தினர் எல்லாம் சாத்தானின் பிள்ளைகள் என சொல்லுவாரா?

சென்னையில் ஒரே ஒரு கவுன்சிலர் பாஜகவிற்கு வந்துள்ளது. மேற்கு மாம்பலத்தில் அங்கு பிராமண சமூகத்தினர் அடர்த்தியாக உள்ளனர். அந்த வாக்குகள் அனைத்தும் பாஜகவிற்கு செல்கிறது. பிராமணர்களும் தமிழர்கள் தான். அவர்களையும் உள்ளடக்கித்தான் நான் அரசியல் செய்கிறேன் என சீமான் சொல்கிறார். அவர்களிடம் இவர் என்றாவது போய், “நீங்கள் ஏன் பாஜகவிற்கே வாக்களிக்கிறீர்கள், ஏன் நாம் தமிழருக்கு வாக்களிக்கவில்லை. போடவில்லை என்றால் நீங்கள் சாத்தானின் பிள்ளைகள் என சொல்வாரா?

இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் எளிய இலக்கா?” என்று காட்டமாக தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com