கோவை சிறுமி கொலை| ”என்கிட்ட சொல்லாமயே எரிச்சாட்டாங்க..” தாய் வேதனை!
கோவை 10 வயது சிறுமி கொலை வழக்கில், உடற்கூறாய்வு முடிந்த பிறகு தாயிடம் சொல்லாமல் கணவர் குடும்பத்தினர் உடலை பின்வாசல் வழியாக ஆம்புலன்ஸில் அனுப்பி எரித்துவிட்டதாக தாய் குற்றம்சாட்டியுள்ளார். சந்தேகம் எழுந்தால் உடலை தோண்டி பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், கணவர் மற்றும் அவருடன் இருந்தவர்கள்மீது குற்றம் சாட்டுவதாகவும் அவர் கண்ணீருடன் கூறினார்.
கோவை சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 21ஆம் தேதி காணாமல் போனதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கண்ணம்பாளையம் பகுதியில் குளக்கரையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் கொண்டு மேற்கொண்ட விசாரணையில் கார்த்திக், மோகன்ராஜ் என்ற 2 பேரைப் பிடித்தனர்.
இரண்டு பேரிடமும் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியின் அண்டை வீட்டில் வசிக்கும் 33 வயது இளைஞர் கார்த்தி என்பவர் சிறுமியை கடத்தி சென்று கொலை செய்தது வாக்குமூலம் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கார்த்திக்கு உதவியதாக இருந்த அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரையும் கைதுசெய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனையடுத்து உறவினர்களின் நீண்ட நேர போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மேலும், குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தான் கொலை செய்யப்பட்டுள்ளதாக கோவை மேற்குமண்டல ஐஜி உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் சிறுமியின் உடற்கூறாய்வு முடிந்து தாயிடம் கூட சொல்லாமல் உடலை எரித்திவிட்டதாக சிறுமியின் தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இறந்துபோன என் குழந்தையை போஸ்ட் மார்டம் பண்ண பிறகு என் கண்ணுல காட்டவே இல்லை.. எனக்கே தெரியாமல் பின் வாசல் வழியா உடலை ஆம்புலன்ஸில் அனுப்பி வச்சிட்டாங்க. என்னிடம் சொல்லாமலே கணவர் குடும்பத்தினர் எரித்துவிட்டார்கள்.
ஒருவேளை எரிக்காமல் புதைத்து இருந்தால் இறப்பில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தோண்டி எடுத்துப் பார்த்திருக்க முடியும். ஆனால், இப்போது எனக்கே தெரியாமல் எரிச்சுட்டாங்க, என்னுடைய கணவர் மற்றும் அவர்கள் உடன் இருந்தவர்கள் மீது நான் குற்றம் சொல்கிறேன்” என கூறியுள்ளார்.

