\
ஆரணியில் பிறந்த குழந்தையை கொலை செய்த தாய்
ஆரணியில் பிறந்த குழந்தையை கொலை செய்த தாய்pt

ஆரணி| திருமணத்தை மீறிய உறவால் விபரீதம்.. தாய் கையால் பிறந்த குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!

திருவண்ணாமலை ஆரணி அருகே திருமணத்தை மீறிய உறவால் பிறந்த குழந்தையை தாயே கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது..
Published on
Summary

திருவண்ணாமலை மாவட்டத்தில், திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட குடும்ப முரண்பாடு துயரமாக முடிந்தது. நான்காவது குழந்தையின் தந்தை குறித்து ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன்-மனைவி பிரிந்தனர். பின்னர் காதலருடன் தங்கிய லட்சுமி, பிறந்த பெண் குழந்தையை வளர்ப்பது குறித்து ஏற்பட்ட தகராறில், குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து, சடலத்தை ஆற்றில் புதைக்க ஒருவரை பணம் கொடுத்து அனுப்பியதாக விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

ஆரணி அருகே படவேடு அடுத்த ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (33) - லட்சுமி (26) தம்பதியருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஹரிஷ் (10), சதன்யா (5), மதி (3) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த மதிவாணன் (32) என்பவருடன் லட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், லட்சுமி நான்காவது முறையாக கர்ப்பமான நிலையில், ரமேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர், லட்சுமிக்கும் மதிவாணனுக்கும் இடையிலான உறவு தெரியவந்ததால், இந்தக் கர்ப்பத்திற்கு நான் காரணமல்ல என்று கூறி, லட்சுமியை வீட்டை விட்டு வெளியேறுமாறு ரமேஷ் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்பிறகு, லட்சுமி மதிவாணன் வீட்டில் தங்கி வந்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மதிவாணன், அவரது தாய் மற்றும் லட்சுமி ஆகியோருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஆரணியில் பிறந்த குழந்தையை கொலை செய்த தாய்
கள்ளக்குறிச்சி | மகனை இரண்டாவதாக திருமணம் செய்த பெண்.. மாமியார் செய்த கொடூர செயல்!

இந்தசூழ்நிலையில் குழந்தையை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்து ஏற்பட்ட குழப்பத்தில், லட்சுமி குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிகிறது. அதன்பிறகு, குழந்தையின் சடலத்தை ஒரு கட்டைப் பையில் வைத்து, ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மதிவாணன் மற்றும் அவரது தாய் மீது புகார் அளிக்க லட்சுமி சென்றுள்ளார். பின்னர், குழந்தையின் சடலத்துடன் ஆரணி, சந்தவாசல், படவேடு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளார்.

பின்னர், குழந்தையின் சடலத்தை எவ்வாறு புதைப்பது என்று தெரியாமல் இருந்த லட்சுமி, ஒருவரிடம் ₹500 தருவதாகக் கூறி, குழந்தையின் சடலத்தை ஆற்றில் புதைக்கச் சொல்லியுள்ளார். அந்த நபரும் ₹500 பெற்றுக்கொண்டு சடலத்தை ஆற்றில் புதைத்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், லட்சுமி இடம் குழந்தை எங்கே என்று ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் கேட்டதற்கு லட்சுமி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து, சந்தேகம் அடைந்த ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் சந்தவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த சந்தவாசல் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில், லட்சுமி குழந்தையை கொன்று ஆற்றில் புதைத்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் ஆற்றில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்தனர். திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில், குழந்தையை கொன்று ஆற்றில் புதைத்தது உறுதியானது. தொடர்ந்து, சந்தவாசல் போலீசார் லட்சுமியை கைது செய்தனர்.

ஆரணியில் பிறந்த குழந்தையை கொலை செய்த தாய்
திருமணத்தை மீறிய உறவு விவகாரம்.. ரூ.5000 லஞ்சம் வாங்கிய SI பணியிடை நீக்கம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com