விஷம் வைத்த பின்பும் குழந்தைகளின் கழுத்தை நெரித்த அபிராமி.. கணவரையும் கொல்ல பிளான்..!
சென்னை அருகே குன்றத்தூரில் தமது இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படும் பெண் நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டார்.
சென்னை அருகேயுள்ள குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளையைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி அபிராமி. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த தம்பதிக்கு 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர். விஜய் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு விஜய் பணிக்குச் சென்றுவிட்டார். வேலைப்பளு காரணமாக அன்றிரவு விஜய்யால் வீட்டுக்கு வரமுடியவில்லை எனக் கூறப்படுகிறது. அடுத்த நாள் காலை விஜய் வீட்டுக்கு வந்து பார்த்த போது அபிராமியை காணவில்லை. இரண்டு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிரிழந்து கிடந்தனர். அதிர்ச்சியில் உறைந்த விஜய், பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தன. குன்றத்தூரில் பிரியாணி கடை ஒன்றில் பணியாற்றும் சுந்தரம் என்பவருக்கும், அபிராமிக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த விஜய் அபிராமியை கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன்காரணமாக இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது தகாத உறவுக்கு இடையூறாக இருக்கும் கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய அபிராமி முயன்றதாக தெரிகிறது.
கடந்த 30-ஆம் தேதி கணவன் விஜய் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து அபிராமி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. இதனையடுத்தே 31-ஆம் தேதி கணவர் வேலைக்குச் சென்றவுடன் குழந்தைகளுக்கு பாலில் விஷத்தை கலந்து கொடுத்து அபிராமி கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விஷம் கொடுத்த பின்னரும் குழந்தைகளின் கழுத்தை அபிராமி நெரித்ததாக தெரிகிறது.
அதன்பின்னர் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு குன்றத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றுக்கு அபிராமி சென்றதாக கூறப்படுகிறது. அங்கு தனது நகையை விற்று பணம் பெற்றுக்கொண்ட பின்னர் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் அபிராமி இருசக்கர வாகனத்தில் வருவது பதிவாகி உள்ளது. குழந்தைகளைக் கொன்ற புகாரில் சிக்கியுள்ள அபிராமியின் வண்டியில் உயிரிழந்த பிஞ்சுகளின் பெயர் எழுதப்பட்டுள்ளது தான் நகைமுரண். வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து பேருந்து மூலம் அபிராமி திருவனந்தபுரம் சென்றதாக தெரிகிறது.
இந்த நிலையில் அபிராமியுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படும் சுந்தரத்தை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவரையும், அபிராமியின் சகோதரரையும் அழைத்துக்கொண்டு நாகர்கோவில் சென்ற காவல்துறையினர், சுந்தரத்தை விட்டு அபிராமியிடம் பேச வைத்தனர். காவல்துறையினர் யோசனைப்படி தன்னைக் காண நாகர்கோவில் வரும்படி அபிராமியை அழைத்தார் சுந்தரம். அதனை நம்பி நாகர்கோவில் வந்த அபிராமி கைது செய்யப்பட்டார்.