வடகிழக்குப் பருவமழையின் முதல் புயல் ‘MONTHA’.. 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை
வடகிழக்கு பருவமழைக் காலத்தின் முதல் புயல் வரும் 27ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும் என்றும், பின்னர், மேலும் வலுவடைந்து, புயலாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் உருவாகும் பட்சத்தில் அதற்கு MONTHA என பெயரிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 27 ஆம் தேதி மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அது புயலாகவும் வலுவடையக்கூடும் என கூறியுள்ளது.
தென் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருப்பதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. நாளை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. வரும் 27 ஆம் தேதி, திருவள்ளூர், சென்னை மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில், மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின், தொடர்ந்து 3ஆவது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் தலைமைச் செயலர், துறை சார்ந்த செயலர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், மக்கள் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும், வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை வலுப்படுத்துமாறும், முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார். மேலும், பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

