தொகுதிப் பங்கீடு | ”உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகிறோம்” - மமக தலைவர் ஜவாஹிருல்லா!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது. இதற்காக, டி.ஆர்.பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவையும் திமுக அறித்திருக்கிறது. இந்த நிலையில்தான், முதலவதாக நேற்று, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஐ.யூ.எம்.எல் தேசியத் தலைவர் காதர் மொகிதீன், “கடந்த தேர்தலில் 3 தொகுதிகள் எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. பேச்சுவார்த்தையில், இந்த முறை 5 தொகுதிகளைக் கேட்டோம். ஆனால், கூட்டணியில் இன்னும் பல கட்சிகளை இணைக்கவிருப்பதால், 1 தொகுதியை குறைத்துக் கொள்ளும்படி கூறியிருக்கிறார்கள். இந்த தொகுதிக் குறைப்பு குறித்து அனைத்து கூட்டணி கட்சிகளிடமும் வலியுறுத்தவுள்ளோம் எனக் கூறியிருக்கிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, மற்ற அனைத்துக் கட்சிகளுக்கு கடந்த தேர்தலை விட குறைவான தொகுதிகளையே ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதா எனக் கேள்வி எழுந்த நிலையில், இன்று மனித நேய மக்கள் கட்சி மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கிறது. அதன்படி, இன்று முதலவதாக மமக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு, வெளியே வந்த அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, “2021 சட்டமன்றத் தேர்தலில் மணப்பாறை மற்றும் பாபநாசம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றது. எனவே, இந்த முறை 5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம். இது முதல் கட்ட பேச்சுவார்த்தை தான். அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள் தரப்படும் என்பது தெரியவரும். அதேபோல, இந்த முறையும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, மதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பிறகு, செய்தியாளர்களை சந்தித்த மதிமுக நிர்வாகிகள், இத்தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் எனத் தெரிவித்துள்ளனர்.

