SIR | தமிழ்நாட்டின் இறுதி வாக்களர் பட்டியல்., மாவட்ட வாரியாக இன்று வெளியீடு!
இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு தொடங்கிய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்களர்களை நீக்கி, 23 லட்சம் பேர் மீண்டும் சேர்க்கப்பட்ட நிலையில், இறுதி பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் (SIR) பணிகளை கடந்த 2025ஆம் ஆண்டு தேர்தல ஆணையம் தொடங்கியது. முதற்கட்டமாக, பீகாரில் எஸ்.ஐ.ஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்களர்களை நீக்கியிருந்தது தேர்தல் ஆணையம். இதையடுத்து, வாக்காளர்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி இருந்தன.
இந்நிலையில்தான், கடந்த ஆண்டே அக்டோபர் மாதம் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான எஸ்.ஐ.ஆர் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து, இம்மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகளைத் தொடங்கிய தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக நடத்தியும் முடித்திருந்தது. இதையடுத்து, ஒவ்வொரு மாநிலங்களுக்குமான வரவு வாக்களர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் கடந்தாண்டு டிசம்பர் தேர்தல் ஆணையம் வரைவு வாக்களர் பட்டியலை வெளியிட்டது. அதில், தமிழ்நாட்டில் மட்டும் 97 லட்சத்து 37 ஆயிரம் வாக்களர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இதற்கு, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெரும் விமர்சனங்கள எழுப்பியிருந்தன.
இந்த நிலையில், தமிழகத்தில் டிசம்பர் 19ஆம் தேதி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய தேர்தல் ஆணையத்தால் அவகாசம் வழங்கப்பட்டது. இதில் 23 லட்சம் பேர் மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பித்திருந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பை எப்பொழுது வேண்டுமானாலும், தேர்தல் ஆணையம் வெளியிட வாய்ப்பிருக்கிறது என்னும் சூழ்நிலையில், இன்று தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அங்கீகரிக்கபட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன் வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே, புதுச்சேரி, கோவா உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இறுதி வாக்களர்ப்பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று தமிழகத்தில் இறுதி வாக்களர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் இம்மாத இறுதியிலும், உத்தரபிரதேசத்தில் ஏப்ரல் மாதமும் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

