\
MINISTER KEERTHANA & MLA KANIMOZHI
MINISTER KEERTHANA & MLA KANIMOZHIKANIMPZHI'S X POST

அமைச்சர் கீர்த்தனாவுக்கு என்ன ஆச்சு? லண்டன் செல்லாததற்கு இதுதான் காரணமா? MLA கனிமொழி விளக்கம்!

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா முதலமைச்சர் விஜயுடன் லண்டன் செல்லாதது ஏன் என்ற கேள்விகள் எழுந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து தவெக எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள தகவல்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.
Published on

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

முதலமைச்சர் ஜோசப் விஜய், லண்டன் சென்றிருந்த நிலையில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான அப்பயணத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, முதலமைச்சர் விஜயுடன் லண்டன் செல்லாதது ஏன் என்ற கேள்விகள் எழுந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து தவெக எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள தகவல்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் அண்மையில் லண்டன் சென்றிருந்தார். இந்தப் பயணம் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்த நிலையில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா உடன் செல்லாதது குறித்தும் கேள்விகள் எழுந்தன. குறிப்பாக, தொழில்துறை அமைச்சர், தொழில்துறை செயலாளர் இல்லாமல் முதலமைச்சர் எப்படி தொழில் முதலீட்டு பயணத்தை மேற்கொண்டார் என எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.

MINISTER ADHAV ARJUNA
MINISTER ADHAV ARJUNAANI

இதுதொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ’’அமைச்சர் கீர்த்தனா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முதலமைச்சருடன் லண்டன் பயணம் மேற்கொள்ளவில்லை’’ என தெரிவித்தார். இதையடுத்து, அவரது உடல்நிலை குறித்து பல்வேறு கேள்விகளும், சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்தன. இந்த நிலையில், கீர்த்தனாவின் உடல்நிலை தொடர்பாக தவெக கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் தனது சமூக வலைதளப் பதிவில் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

அதில், கீர்த்தனாவை கழுத்தெலும்பு அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் சந்தித்ததாகவும், மருத்துவர்கள் 20 நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியிருந்த நிலையில், மாநிலத்தின் மீதான அர்ப்பணிப்பு காரணமாக நான்கு நாட்களிலேயே அவர் மீண்டும் பணிக்குத் திரும்பியதாகவும் கனிமொழி சந்தோஷ் குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோதும் முதலமைச்சரின் லண்டன் பயணத்துக்கான ஏற்பாடுகளை கீர்த்தனா ஒருங்கிணைத்ததாகவும், ஒவ்வொரு ஏற்பாடும் சரியான நேரத்தில் நடைபெறுகிறதா என்பதிலேயே அவர் கவனம் செலுத்தியதாகவும் கனிமொழி தெரிவித்துள்ளார். கீர்த்தனாவின் உடல்நிலை சரியில்லை, அவர் நான்கு நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருந்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை குறித்து சிலர் மாதவிடாயுடன் தொடர்புபடுத்தி விமர்சனங்களை முன்வைத்ததாகவும் கனிமொழி சந்தோஷ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

KANIMPZHI'S X POST
KANIMPZHI'S X POSTKANIMPZHI'S X PAGE

ஒரு பெண்ணின் உடல்நலப் பிரச்னையை குறிப்பிட்ட ஒரு காரணத்துக்குள் மட்டும் சுருக்கிப் பார்ப்பது சரியல்ல என்றும், பெண்களின் தனிப்பட்ட உடல்நிலை குறித்து தேவையற்ற கேள்விகள் எழுப்பப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கீர்த்தனாவின் உடல்நிலை குறித்த தனிப்பட்ட தகவலை வெளியிட்டதற்காக அவரிடம் மன்னிப்பு கோருவதாகவும் கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். இந்த விவரங்களை கீர்த்தனா தனிப்பட்டதாக வைத்திருக்க விரும்பியதை தான் அறிந்திருந்தாலும், பெண்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் இந்த தகவலை வெளியிட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com