திருச்சி கிழக்கில் போட்டியா? முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம்!!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்ற நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் முதன்முறையாக தேர்தலை சந்தித்த தமிழக வெற்றிக் கழகம் இடையே 4 முனைப்போட்டி நிலவுவதாக பார்க்கப்பட்டது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகமே வெற்றி பெறும் எனத் தெரிவித்திருந்தன. அதேபோலவே, பத்திரிக்கையாளர்களும் தவெக வெற்றி பெற வாய்ப்பில்லை. ஆனால், ஓரளவு வாக்கு சதவீதத்தை மற்றும் பெறும் எனத் ஊடகங்களில் பேசிவந்தனர்.
ஆனால், வாக்குப்பதிவு நாளான மே-4 ம் தேதி அத்தனை கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி நிலைமை தலைகீழாக மாறியது. அன்றைய தினம், வாக்குப்பதிவு தொடங்கிய காலை 8 மணிக்கு முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போதிலிருந்தே தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலையில் சென்றது. ஒருகட்டத்தில் அப்போதைய ஆளுங்கட்சியான திமுக மூன்றாவது இடத்திற்கு கூட சென்றது. எனினும், வாக்குப்பதிவின் இறுதியில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது. திமுக தலைமையிலான கூட்டணி 73 இடங்களை வென்று எதிர்க்கட்சியானது. அதேசமயம், அதிமுக கூட்டணி 53 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது.
இத்தேர்தலில், திமுக தோற்றதைத் தாண்டி மற்றுமொறு அதிர்ச்சியும் அக்கட்சித் தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் தோல்வியைத் தழுவியிருந்தார்.
இந்தசூழலில் தான், தவெக வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்க போதிய இடங்கள் கிடைக்காத நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் இருந்த விசிக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. முதலில் வெளியில் இருந்து ஆதரவு என தெரிவித்த ஐயூஎம்எல் மற்றும் விசிக தற்போது அமைச்சரவையில் பங்கேற்று இருக்கிறது. இந்த சூழலில் தான், திமுக நிர்வாகிகள் கூட்டணிக் கட்சிகள் முடிவை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இச்சூழலில், முதல்வர் விஜய் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றிருந்த நிலையில், திருச்சி கிழக்கை அவர் ராஜினாமா செய்திருந்தார். அதேபோல, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்திருக்கும் 5 தொகுதிகள் உட்பட விரைவில் 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதைத்தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஸ்டாலின், இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இந்தசூழலில் தான், ஸ்டாலின் திருச்சி கிழக்கு தொகுதிகள் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடுவதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு காரில் அமர்ந்தப்படி பதில் அளித்து மு.க.ஸ்டாலின் “இன்னும் இடைதேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை” என பதில் அளித்துள்ளார்.

