MK Stalin Releases DMK Election Manifesto: Key Promises
திமுக தேர்தல் அறிக்கைPt web

திமுக தேர்தல் அறிக்கை | மகளிர் உரிமைத் தொகை உயர்வு to இல்லத்தரசி கூப்பன்.. 50 முக்கிய வாக்குறுதிகள்!

திமுக தேர்தல் அறிக்கையை திமுகவின் தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள நிலையில், முக்கிய வாக்குறுதிகள் குறித்துப் பார்க்கலாம்.
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள சூழலில், ஆளும் திமுக 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவிருக்கிறது. 70 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியிருக்கும் நிலையில், 164 இடங்களில் திமுக நேரடியாக களம் காணவிருக்கிறது. இந்த சூழலில் தான், நேற்று 164 வேட்பாளர்களை திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். தொடர்ந்து, திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

NGMPC059

முன்னதாக, எதிக்கட்சியான அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. தவெக தேர்தல் அறிக்கையை பகுதிபகுதியாக வெளியிட்டு வருகிறது. தேர்தல்களின் கதாநாயகன் என வர்ணிக்கப்படும் அளவுக்கு தேர்தல் அறிக்கை வெற்றிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் நிலையில் தான், அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை செதுக்குகின்றன. 2021-தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு தேர்தல் அறிக்கையும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணத்திட்டம் உள்ளிட்ட மக்களிடையே பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றிருந்தன. தொடர்ந்து, அதிமுக மகளிர் உரிமைத் தொகையை 2000 ரூபாயாக உயர்த்தப்படும், குளிர்சாதனப் பெட்டி வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தான், மகளிரைக் கவரும் வகையில் அதிகப்படியான திட்டங்கள் கொண்டு வரப்படும். மேலும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்குமான முக்கியத் திட்டங்களும் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கையை உருவாக்க திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, பல்வேறு தரப்பு மக்களிடையே கருத்துக்களைக் கேட்டு இந்தத் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கிறது. கோவி. செழியன், டி.ஆர்.பி ராஜா, டி.கே.எஸ். இளங்கோவன், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் அங்கம் வகித்தனர்.

இந்த சூழலில் தான் இன்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். தொடர்ந்து, 50 முக்கியமான வாக்குறுதிகள் குறித்தும் விளக்கியிருக்கிறார். அதன்படி,

1) முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் 5 ஆம் வகுப்பில் இருந்து 8 ஆம் வகுப்பு வரை உயர்த்தித் தரப்படும்

2) மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்படும்.

3) இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எவ்வித மீட்டரும் பொறுத்தப்படாத இலவச பம்செட்டுகள் வழங்கப்படும்

4) அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.

5) முதல்வர் காப்பீட்டு 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்

6) புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்படி மாதம்தோறும் வழங்கப்படும் 1000 ரூபாய் இனி 1500 ரூபாயாக உயர்த்தப்படும்

மகளிர் உரிமைத் தொகை
மகளிர் உரிமைத் தொகைகோப்பு படம்

7) நெல்கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 ஆகவும், கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்

8) பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தப்படும்

9) முதியோர் உதவிக்தொகை 1200 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை 1500 ரூபாயிலிருந்து 2500 ரூபாயாக உயர்த்தப்படும்

10) மீன்பிடித் தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை 8000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாகவும், மீன்பிடி குறைவுகால சிறப்பு நிவாரணத் தொகை 6,000 ரூபாயிலிருந்து 9,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

11) அன்னைத் தமிழைப் போற்ற பன்னாட்டுத் தமிழ் அறிஞர்களையும், மொழி வல்லுநர்களையும் கொண்டு சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்

12) ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான அறிக்கையை நாடு முழுவதும் விவாதப் பொருளாக்கி, மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும்.

13) சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்கும் பெண்கள், தொழில் முனைவோராக முன்னேறிடும் வகையில் பிணை ஏதுமின்றி ரூ.5 லட்சம் வரை மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்படும்

14) பேரிடர் கால இழப்பீடுகளாக, இறவைப் பாசன பயிர்கள் மற்றும் நெல் பயிர்கள் - ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.25,000, நீண்டகாலப் பயிர்கள் - ரூ.27,000, மானாவாரிப் பயிர்கள் - ரூ.12,000 என உயர்த்தி வழங்கப்படும்

15) மாவட்டங்கள் முதல் வட்டங்கள் வரையிலான அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான கருவிகள் இரண்டு மடங்காக்கப்படும்.

மடிக்கணினி வழங்கும் திட்டம்
மடிக்கணினி வழங்கும் திட்டம்கோப்பு படம்

16) . அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்காக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படும்

17) ஒன்றிய அரசின் எட்டாவது ஊதியக் குழு அறிக்கையை ஒன்றிய அரசு செயல்படுத்தியதும், அதனை மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் செயல்படுத்த குழு அமைக்கப்படும்.

18) அரசு அமைப்புகளில் ஏற்படும் 1.5 இலட்சம் காலிப் பணியிடங்கள் காலதாமதமின்றி நிரப்பப்படும். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள் உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

19) அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு உரிய நேரத்தில் கொடுக்க நடவடிக்கை.

20) உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கும் ஐந்து ஆண்டுகளுக்குள் மடிக்கணினி வழங்கப்படும்.

21) நான் முதல்வன் திட்டத்தின்கீழ் திறன்பயிற்சி மேற்கொள்ள முன்வரும் ஐந்து லட்சம் மாணவர்களுக்கு 6மாத பயிற்சியுடன் ரூ.1500 உதவித் தொகையும் வழங்கப்படும்

22) புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், 2030-ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியோ டைடல் பூங்காக்கள்; நகரங்களில் தேவைப்படும் இடங்களில் முழு அளவிலான தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும்.

23) தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 2.5 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 5 இலட்சம் கோடி ரூபாயாக இரண்டு மடங்கு ஆக்கப்படும்.

24) 18 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு, அதன்மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

25) தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 2.5 லட்சம் கோடியிலிருந்து, 5 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை

26) 5,000 கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்யப்படும். ஆயிரம் கிராம தெய்வத் திருக்கோவில்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்.

27) சிறுபாண்மையினர் தொழில் தொடங்க tamco மூலம் கடன்பெறும் உச்ச வரம்பு 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

28) அனைத்து மாவட்டங்களிலும் உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் கூடிய தரம் வாய்ந்த விளையாட்டு விடுதிகள் கட்டப்படும்

29) மிகவும் வறுமையில் வாடும் நலிவடைந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வீட்டு வசதி, சமூகப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், திறன் மேம்பாடு, வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கிடைக்க தாயுமானவர் திட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

30) கிராம சாலைத் திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் கி.மீ நீளமுள்ள சாலைகள் ரூபாய் 10,000 கோடி மதிப்பீட்டில் சீர்செய்யப்படும்

31) அனைத்து மாநகராட்சிகள், முக்கிய நகராட்சிகளில் 50 புதிய செம்மொழிப் பூங்காக்கள் அமைக்கப்படும்

32) . திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம் மாநகராட்சிகளின் அருகில் நவீன உலகத்தர வசதிகளுடன் புதிய நகரங்கள் அமைக்கப்படும்

33) அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 புதிய பேருந்துகள் இயக்கப்படும்

34) ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்படும்.

35) மொழிப்போராட்ட வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிய, நவீன நூலக வசதிகளுடன் கூடிய காட்சிக் கூடம் பொள்ளாச்சியில் அமைக்கப்படும்

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்

36) நிகர சாகுபடி மதிப்பு 50 லட்சம் ஹெக்டராக உயர்த்தப்படும்.

37) தொழிற்சாலைகள் அதிகமுள்ள நகரங்களில், பெண்கள் வேலைக்குச் செல்வதை எளிதாக்கும் பொருட்டு, 1000 குழந்தைகள் காப்பகங்கள் உருவாக்கப்படும்.

38 ) பல்வேறு துறைகளில் சிறப்புறப் பணியாற்றிடும் திருநர் - திருநங்கையருக்கு விருது வழங்கப்படும்.

39) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தம் இல்லா நிலை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

40) பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் தொழில் தொடங்க, TABCEDCO மூலம் கடன் பெறும் உச்சவரம்பு 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

41) கடலூர், தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம், சேலம், திருப்பூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

42) பத்திரிக்கையாளர்களின் குழந்தைகள் கல்விக்காக வழங்கப்படும் பல்வேறு உதவித்தொகைகள் அனைத்தும் இரு மடங்காக உயர்த்தப்படும்.

43) தமிழ்நாட்டில் 10 கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும்.

44) தமிழ்நாட்டின் MSME நிறுவனப் பொருள்கள் உலக அளவில் சந்தைப்படுத்த மெய்நிகர் வணிகத் தளம் உருவாக்கப்படும்.

45) கிராமப்புறங்களின் ஆதாரங்களைக் கொண்டு, ஊரகப்பகுதிகளில் 5000 புத்தொழில்கள் தொடங்கப்படும்.

NGMPC059

46) கூடைப்பந்து, கைப்பந்து, பேட்மிண்டன், தற்காப்புக் கலை, வாள்வீச்சு விளையாட்டுகளுக்கான பல்நோக்கு வசதிகொண்ட உள்விளையாட்டு அரங்குகள் அனைத்து மாவட்டங்களிலும் இருப்பது உறுதி செய்யப்படும்.

47) மீனவர்கள் தங்களின் வருவாயை பெருக்குவதற்குத் தேவையான நவீன உட்கட்டமைப்பு வசதிகள் மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்குதளங்களில் ஏற்படுத்தித் தரப்படும்.

48) அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் Wi-Fi வசதியுடன் கூடிய டிஜிட்டல் கற்றல் மையங்கள்

49) முதல்வர் படைப்பகங்கள், அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைக்கப்படும்.

50) 8 ரூபாய் மதிப்பிலான கூப்பனை பயன்படுத்தி வாஷிங் மெஷின், டி.வி, ஃபிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை, வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக்கொள்ளவோ அல்லது பயன்படுத்தி வரும் பழைய பொருட்களை மாற்றிக் கொள்ளவோ ‘இல்லத்தரசி கூப்பன்’ வழங்கப்படும்.

உள்ளிட்ட வாக்குறுதிகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

MK Stalin Releases DMK Election Manifesto: Key Promises
’PhD வரை படிக்க பிணையில்லா கடன்..’ கவனம் ஈர்க்கும் விஜய்யின் இளைஞர்களுக்கான 10 வாக்குறுதிகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com