முரசொலி நிர்வாகம் To மத்திய அமைச்சர்! மதுரை மண்ணின் நாயகனாக உருவான மு.க.அழகிரி! பிறந்தநாள் ஸ்பெஷல்

கட்சியில் இருந்தாலும் சரி.. நீக்கப்பட்டாலும் சரி.. தனது வார்த்தைகளைக் கொண்டே தமிழக அரசியல் களத்தில் ஆகப்பெரும் அணு குண்டுகளை போட்டு வந்த மு.க.அழகிரி, இன்று தனது 73வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.
MK Alagiri
MK AlagiriPT

மு.க முத்து திரைத்துறையில் அடியெடுத்து வைத்தபோது, வீசிய வாரிசு அரசியல் முழக்கம், மு.க அழகிரி அடியெடுத்து வைத்தபோது, அந்த அளவுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மதுரை முரசொலியை நிர்வகிப்பதில் தொடங்கி, மத்திய அமைச்சர் ஆனது வரை மு.க. அழகிரி தொட்ட உயரங்களை அவரது பிறந்தநாளில் அலசலாம்.

திமுகவில் இளம் ரத்தத்தை பாய்ச்ச 1983ல் இளைஞரணி தொடங்கப்பட்டு, அதற்கு பொறுப்பாளர்களாக மு.க.ஸ்டாலின், திருச்சி சிவா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். அதே காலகட்டத்தில்தான், பிற்காலத்தில் திமுகவையும், தனது தம்பியான மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிய மு.க.அழகிரி மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பிறந்தது முதலே சென்னையில் வசித்து வந்த மகன் மு.க.அழகிரியை, மதுரை முரசொலி பதிப்பை கவனித்துக் கொள்ளுமாறு அனுப்பிவைத்தார் கலைஞர். காந்தி என்ற பெண்ணை அழகிரி திருமணம் செய்து கொண்ட நிலையில், பிற்காலத்தில் ’நான் தாழ்த்தப்பட்ட சமூதாயத்தின் சம்மந்தி’ என்று கலைஞர் சொல்லிக்கொள்ளவும் இவரது திருமணம் தான் காரணம்.

முரசொலி நிர்வாகத்தை கவனிப்பதை மட்டுமே கடமையாக வைத்திருந்த அழகிரி, தனது பைக்கிலேயே சுற்றுவது, மக்களை சந்திப்பது என்று எளிதாக அணுகக்கூடிய நபராக வலம் வந்தார். முதல்வரின் மகன் என்ற பில்டப் இல்லாமல் இருந்தாலும், அரசியல் காய் நகர்த்தல்கள், தேர்தல் கூட்டம் என்று பிற்காலத்தில் மதுரை அரசியலில் கோலோச்சத்தொடங்கினார் அழகிரி. 1989 பொதுத்தேர்தலில், மதுரை மேற்கு தொகுதியில் பொன் முத்துராமலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம்பெற்றார். இதற்கு காரணமாக இருந்தவர் அழகிரி. அதுமுதல், அழகிரியை நோக்கி படையெடுத்துனர் திமுகவினர். இவரைப் பிடித்தால், இவருடன் தொடர்பு வைத்திருந்தால், திமுக தலைமையிடம் தொடர்பு வைத்திருப்பதற்கு சமம் என்று கருதினர். மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட நிர்வாகிகளும் அழகிரி பக்கம் திரும்பினர்.

திமுகவில் இருந்து வைகோவின் விலகலுக்குப் பிறகும், மாவட்டச் செயலாளர்கள் வெளியேறியதற்கு பிறகும், 1996ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுகவை செல்வாக்காக மாற்றி, அறுதி பெரும்பான்மையுடன் வெற்றிபெற வைத்தார் அழகிரி. இதனையடுத்து, ஆண்டுதோறும் அவரது பிறந்தநாள் விழாக்கள் கொண்டாட்டமானது. எம்.எல்.ஏக்கள் தொடங்கி, அமைச்சர்கள் வரை வீடு தேடி வந்து வாழ்த்துச் சொல்லி சென்றனர்.

இதற்கிடையே, 2001ம் ஆண்டு காலகட்டத்தில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மிசா பாண்டியனுக்கு அழகிரி நெருக்கமாக இருந்ததாக கூறி, தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் அழகிரி. மிசா பாண்டியனுக்கு ஆதராவாக அழகிரி செயல்பட்டபோதுதான், மதுரை மாவட்ட திமுகவிற்குள் அழகிரி கோஷ்டி, ஸ்டாலின் கோஷ்டி என்று பிரச்சனை வெடித்தது. இதற்கிடையில் சட்டமன்ற தேர்தல் வரவே, தேர்தல் களத்தில் திமுகவுக்கு எதிராக மதுரை மண்டலத்தில் போட்டி வேட்பாளர்களை நிறுத்தி அவர்களை தோற்கடித்தார் அழகிரி. அழகிரி ஆதரவால் வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, அழகிரி இல்லை எனில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வெற்றி இல்லை என்ற சூழல் உருவானது.

MK Alagiri
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயற்சி: ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் சென்னையில் கைது!

இதற்கிடையே, அழகிரியை எதிரில் வைப்பதைவிட, அருகில் வைப்பதே மேல் என்று பார்த்தது திமுக தலைமை. அப்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில், மதுரையில் திமுக வெற்றிபெற்றது. மேயர் பதவி திமுகவுக்கு கிடைத்தாலும், துணை மேயர் பதவி திமுகவுக்கு கிடைக்காத சூழல் நிலவியது. அப்போது, அதிமுக கவுன்சிலர்களை தன் பக்கம் திருப்பி, துணை மேயர் பதவியை திமுகவுக்கு பெற்றுத்தந்தார் அழகிரி. இந்த இடத்தில்தான் அழகிரியின் அரசியல் ராஜதந்திரம் பலருக்கும் புரிந்தது. இதையடுத்து அழகிரியின் செல்வாக்கு கட்சியில் மீண்டும் அதிகரித்தது.

2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் வெற்றியை பெற்ற திமுக, ஆட்சியை அமைத்தது. தொடர்ந்து, எம்.எல்.ஏவாக கூட இல்லாத அழகிரி, 2009ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 27 பேர் வெற்றிபெற்றனர். அதில் அழகிரியும் முதன்மையானவர். தொடர்ந்து, ரசாயனம் மற்றும் உரத்துறைக்கு அமைச்சராக அழகிரியை அமரவைத்து, அவரது உழைப்புக்கு அங்கீகாரம் கொடுத்தார் கலைஞர்.

MK Alagiri
யூட்யூப் விளம்பரம் பார்த்தால் பணமா? மோசடியில் ஈடுபட்டதா My V3 விளம்பரங்கள்..?

இதற்கு முக்கிய காரணம், 2006 - 2011ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்ற 10க்கும் மேற்பட்ட இடைத்தேர்தல்களில் வெற்றிக்கனியை திமுகவிற்கே பறித்துக்கொடுத்திருந்தார் அழகிரி. அதனாலேயே, திமுகவில் தென் மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பதவியை உருவாக்கி, அதில் அழகிரியை அமரவைத்து அழகுபார்த்தார் கலைஞர். இது ஒரு பக்கம் இருக்க, அவரது ஆதரவாளர்கள், மதுரை பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுவது என்று இருந்ததால், விமர்சனமும் எழுந்தது. குறிப்பாக தினகரன் நாளிதழ் எரிப்பு சம்பவம் போன்றவை விமர்சனத்திற்குள்ளாகின.

முன்னதாக திருமங்கலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வார்டு வாரியாக திமுகவிற்கு வியூகம் அமைத்து வெற்றிபெறவைத்தார் அழகிரி. அப்போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது ஒரு ஃபார்முலா என்று கூறிய நிலையில், அதையே திருமங்கலம் ஃபார்முலா என்று தவறாக பேசப்பட்டன. இதற்கு அடுத்த காலகட்டங்களில், தினகரன் நாளிதழ் எரிப்பு, திருமங்கலம் ஃபார்முலா என்று விமர்சனங்கள் எழ, அவரது அரசியல் அடித்தளமும் ஆட்டம் கண்டது.

2011ம் ஆண்டு தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்த நிலையில், மதுரை மண்டலத்தின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றியை தனதாக்கியது. அழகிரியின் கோட்டையில், அவரது ஆதரவாளர்களே வீழ்ந்தனர். 2014ம் ஆண்டு கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக கூறி, அழகிரியை கட்சியில் இருந்து நீக்கியது திமுக தலைமை. தொடர்ந்து, அதிருப்தியில் இருந்த அழகிரி ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் இணைய முற்பட்டார் என்ற பேச்சு எழுந்தது. இந்த காலகட்டத்தில்தான், 2016ம் ஆண்டு தேர்தலில் திமுக மீண்டும் தோற்றது. கலைஞரின் மறைவுக்கு முன்பு வரை கட்சியில் இணைவாரா என்ற கேள்வி இருந்த நிலையில், அவரது மறைவுக்குப் பிறகு அது கேள்விக்குறிதான் என்ற நிலை தொடர்ந்தது.

ஆம், 2018ம் ஆண்டு கலைஞர் மறைந்தபோது, தம்பியுடன் சேர்ந்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, கலைஞரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்டார் அழகிரி. இறுதி மரியாதை எல்லாம் செய்தபிறகு நீண்ட ஆண்டுகளாக ஸ்டாலினை சந்திக்காத அவர், ”நான் என்ன துரோகம் செய்தேன்? என்னை ஏன் கட்சியில் இருந்து நீக்கினார்கள்” என்று கேள்விகளை எழுப்பி வந்தார். குறிப்பாக, 2021ம் ஆண்டு தேர்தலில் ஸ்டாலின் முதல்வராவார் என்பதெல்லாம் நடக்காது என்று கூறியவர், வெற்றிபெற்ற பிறகு எக்ஸ் தளத்தில் வாழ்த்துப்பதிவை மட்டும் வெளியிட்டிருந்தார்.

MK Alagiri
“மம்தா பானர்ஜியை அறையுங்கள்” - மே.வங்க பாஜக தலைவர் கருத்து; தொடரும் டிஎம்சி தலைவர்களின் எதிர்ப்பு!

அவ்வப்போது, ஆதரவாளர்களைக் கூட்டி பேசி வந்தவர், 2021ம் ஆண்டு தேர்தலின்போது தனிக்கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து முடித்தார். ஆம், ”நான் எந்த முடிவை எடுத்தாலும் நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தனது ஆதரவாளர்களிடம் பேசினார் அழகிரி. அதற்கு அர்த்தம், தான் தனியாக கட்சி தொடங்க மாட்டேன் என்பதுதான். அப்பா இறந்தபிறகு, ஆட்சி பொறுப்பேற்ற பிறகு என 5 ஆண்டுகளாக பேசிக்கொள்ளாத, வெளிப்படையாக சந்தித்துக்கொள்ளாத, அண்ணன் தம்பி(மு.க.அழகிரி - மு.க.ஸ்டாலின்) இருவரும் கடந்த ஆண்டு தங்களது தாய் தயாளு அம்மாளின் பிறந்தநாள் அன்று கோபாலபுரம் வீட்டில் சந்தித்து பேசிக்கொண்டனர்.

முன்னதாக, 2022ம் ஆண்டு டிசம்பரில் அமைச்சர் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு சென்றபோது, தனது பெரியப்பா, அழகிரியை சந்தித்து காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன்னை சந்திக்க வந்த தம்பி மகனை ஆரத்தழுவி மகிழ்ந்தார் அழகிரி. அப்போது, அழகிரி மீண்டும் கட்சிக்குள் வருவாரா என்ற கேள்விக்கு, எனக்குத்தெரியாது என்றார் உதயநிதி. அப்போது பேசிய அழகிரி “தம்பி முதல்வராக இருக்கிறார். தம்பி மகன் அமைச்சராக இருக்கிறார். வேறென்ன மகிழ்ச்சி வேண்டும்” என்று நெகிழ்ச்சி தெரிவித்தார். ஒரு காலத்தில் அஞ்சா நெஞ்சன், வீர தீர செயல்களுக்கான அடையாளம் என்று திமுகவினரால் புகழப்பட்ட அழகிரி, இன்று அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லை என்பதுதான் நிதர்சனம்! ஆனாலும், அரசியலில் தான் இருந்த காலம் வரையிலும் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக இருந்தவர் மு.க.அழகிரி.

எழுத்து: யுவபுருஷ்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com