நேரில் பார்த்துவிட்டதால் சிறுவன் கடத்தப்பட்டு கொலையா? கிருஷ்ணகிரி சம்பத்தின் பகீர் பின்னணி!
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேயுள்ள மாவநட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் - மஞ்சு தம்பதியினரின் இளைய மகன் ரோகித். 13 வயதாகும் இவர் அருகிலுள்ள அரசு பள்ளியொன்றில் எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுவன் ரோகித் நேற்று மாலை 4 மணியளவில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அஞ்சட்டி காவல் நிலையத்தில் நேற்று இரவே புகார் அளித்துள்ளனர். ஆனால், புகார் தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கவில்லை என காவல்துறையினர் மீது பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர். மேலும், இரண்டு சிறுவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் போராட்டம் நடத்தியவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, இன்று காலை “கடத்தலுக்கு பயன்படுத்திய கார் அதே பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது; இருப்பினும் பெற்றோர் அளித்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. கடத்தப்பட்ட சிறுவன் குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை” எனக் கூறி அஞ்செட்டி பேருந்து நிலையத்தின் அருகே சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்ட நிலையில் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.
உயிரிழந்த சிறுவனனின் உறவினர்கள் இரு சிறுவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த நிலையில், இரு சிறுவர்களையும் கைது செய்து காவல் துறையினர் விசாரித்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் சிறுவன் நேற்று இரவு 8 மணியளவில் அடித்து கொலை செய்யப்பட்டு வனப்பகுதியில் வீசப்பட்டது தெரியவந்தது.
குறிப்பாக, சிறுவனின் உடல் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வனப்பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் உடல் வீசப்பட்டிருப்பதைக் கண்டறிந்து உடலைக் கைப்பற்றினர். மேலும் ஐந்து பேரிடம் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி கண்டறியப்பட்டு கைது செய்யப்படும் வரை உடலை பிரேத பரிசோதனைக்கு வழங்கமாட்டோம் எனக் கூறு மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்தப்போராட்டம் நீடித்தது. ஏனெனில், அதே கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது காதலருடன் தனிமையில் இருந்ததை சிறுவன் பார்த்துவிட்டதாகவும், சிறுவன் வெளியில் சொல்லிவிடுவார் என்ற காரணத்திற்காகவே நேற்று மாலை சிறுவன் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் அந்த சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த நபர் யாரென்று தெரிய வேண்டும்; அவரைக் கைது செய்ய வேண்டுமென பல்வேறு கோரிக்கைகளை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், காவல்துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கண்டிப்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்த நிலையில், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அஞ்சடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.