பீகார் | மீண்டும்.. மீண்டுமா.. திருமணமான 48 நாட்களில் கணவரைச் சுட்டுக் கொன்ற மனைவி! பகீர் பின்னணி!
மேகாலயாவில் சோனம் ரகுவன்ஷி தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொன்றதாகக் கூறப்படும் பரபரப்பான தேனிலவு கொலை வழக்கைத் தொடர்ந்து, ஜார்க்கண்டிலும், ஆந்திராவிலும் அடுத்தடுத்து இதேபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பீகாரிலும் அப்படியொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பீகாரின் ஔரங்காபாத் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள பர்வான் கிராமத்தில் வசிக்கும் பிரியான்ஷு என்ற நபருக்கும் குஞ்சா தேவி என்ற பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பின்னர், கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்கிடையே, புதிதாகத் திருமணமான குஞ்சா தேவி, தனது சொந்த மாமா ஜீவன் சிங் (55) உடன் சேர்ந்து, கணவர் பிரியான்ஷுவைக் கொன்றுள்ளார்.
இதுதொடர்பான விசாரணையில், குஞ்சா தேவி மற்றும் ஜீவன் சிங் இருவரும் காதலித்து ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளனர். ஆனால் அவர்களது குடும்பங்கள் அதற்கு ஆதரவாக இல்லை. இதையடுத்து குஞ்சா தேவியை பிரியான்ஷுவுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர். ஜூன் 25 அன்று, பிரியான்ஷு தனது சகோதரியைப் பார்த்துவிட்டு ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், நவி நகர் ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது அவர், ‘தன்னை அழைத்துச் செல்ல யாரையாவது பைக்கில் அனுப்பு, என மனைவி குஞ்சா தேவியிடம் கூறியுள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட குஞ்சா தேவி, தாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்த ஆட்களால் அவரைக் கொலை செய்ய பணித்துள்ளார். அவர்கள் பிரியான்ஷுவை சுட்டுத் தள்ளிவிட்டனர். இதில் சுட்டுத் தள்ளியவர்களும் குஞ்சா தேவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜீவன் சிங் தலைமறைவாகியுள்ளார். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. தவிர, குஞ்சா தேவி பிரியான்ஷுவைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியது குறித்த விவரங்களையும் அவரது மொபைலில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளது” என போலீஸார் தெரிவித்துள்ளனர்.