கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான சுற்றறிக்கை.. சிபிஎம் - சிபிஐ அலுவலகத்தில் அமைச்சர்கள்.. பேசியது என்ன?
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களில் தவெக வென்றிருந்தாலும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆட்சியமைத்திருக்கிறது. இதற்கிடையில், முதலில் வெளியில் இருந்து ஆதரவு எனத் தெரிவித்த விசிக தவெக கூட்டணியில் இணைந்திருக்கிறது. எனினும், இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்து இருந்து வருகின்றன. சமீபத்தில், தவெக ஆதரவு கட்சிக் கூட்டத்தில் கூட சிபிஎம் மற்றும் சிபிஐ பங்கேற்கவில்லை.
இதற்கிடையில், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளித் கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே துறை இடைத்தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்து தமிழக அரசின் கல்லூரி கல்வித் துறை சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. போராட்டங்களை ஒடுக்கும் நோக்கில் தவெகவின் சுற்றறிக்கை இருப்பதாக சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. தொடர்ந்து, இடதுசாரி கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்பு சார்பில் போராட்டங்களும் நடத்தி இருந்தன.
எனினும், சுற்றறிக்கை அரசின் உத்தரவின் பேரில் வெளியிடப்படவில்லை என்றும், மாணவர்களின் ஜனநாயக உரிமைகளைத் தடுக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் தவெக தரப்பில் விளக்கம் அளித்ததுடன் சுற்றறிக்கையும் திரும்பப்பெற்றிருந்தது.
இந்தச்சூழலில் தான், சிபிஎம் அலுவலத்திற்கும் சிபிஐ அலுவலகத்திற்கும் சென்று இடதுசாரி தலைவர்களை தவெக அமைச்சர்கள் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
முதலாவதாக, சென்னை தி. நகரில் உள்ள சிபிஎம் அலுவலகத்திற்கு என்ற ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த், ராஜ் மோகன் மற்றும் நிர்மல்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகளை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நிர்மல்குமார், “கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான சுற்றறிக்கைக்கு வந்து மன்னிப்பு தெரிவித்திருப்பதாகவும், தூய்மைப் பணியாளர் விவகாரம் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் விவகாரம் குறித்தும் பெ. சண்முகத்திடம் பேசியதாக தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, தவெக அமைச்சர்கள் சிபிஐ மாநில அலுவலத்திற்கு சென்று அக்கட்சியின் மாநில செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.
இதற்கிடையில், செப்டம்பர் - 9-ம் தேதி தவெக ஆதரவுக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும், மதிமுக மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளை அடுத்தடுத்து தவெக அமைச்சர்கள் நேரில் சென்று அழைக்கலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது.
