கஷ்டத்தைச் சொன்ன மூதாட்டிக்கு தங்கக்கம்மல்.. அமைச்சர் சேகர்பாபு கொடுத்த சர்ப்ரைஸ்
சென்னையில் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மக்களை சந்திக்கும்போது மூதாட்டி ஒருவர் அமைச்சர் சேகர் பாபுவிடம் வந்து பேசினார்.
எதாவது உதவி தேவைப்படுகிறதா? உடனடியாக ஏதேனும் தேவை உள்ளதா என அமைச்சர் அந்த மூதாட்டியிடம் கேட்டார். அதற்கு அவரோ, ‘எனக்கு நல்ல வேலை இல்லை ரொம்பவே கஷ்டப்படுகிறேன்’ என கூறினார். மேலும், ‘இங்கே ஒரு ஹோட்டலில் சாமான் கழுவும் வேலைக்குத்தான் போகிறேன்’ என கூறினார்.
‘75 வயசுல எதுக்கு வேலைக்கு போற, சந்தோசமா இரு’ என அமைச்சர் பதில் அளித்தார். மூதாட்டி அணிந்திருந்த கம்மல் மூக்குத்தியை பார்த்து ‘இதெல்லாம் கோல்ட்டா?’ என அமைச்சர் கேட்க அந்த இடத்தில் சிரிப்பலை எழுந்தது.
அதற்கு ‘இதெல்லாம் கவரிங், இந்தாங்க பாருங்க’ என எதார்த்தமாக மூதாட்டி பதிலளித்தார். உடனே அமைச்சர் ‘வேண்டாம்.. வேண்டாம்.. நான் உனக்கு ஒரு தங்க கம்மல் வாங்கி தருகிறேன்’ என கூறிவிட்டு, தனது உதவியாளரை பார்த்து குறித்துக்கொள்ளும்படி கூறிவிட்டு நகர்ந்தார்.
தற்போது அமைச்சர் சொன்னபடியே மூதாட்டிக்கு தங்க கம்மல் வாங்கி காதில் போட்டுவிட்டுள்ளார். ஒரு காதில் கம்மலை அமைச்சர் மாட்டிவிட, மற்றொன்றில் மேயர் பிரியா மாட்டிவிட்டார். அமைச்சருக்கு நன்றி தெரிவித்த மூதாட்டியின் வீடியோவும் தற்போது பகிரப்பட்டு வருகிறது.