"அரசு பதவிக்கு ரூ.5 கோடி லஞ்சம்" சர்ச்சையில் அமைச்சர் ராஜ்மோகன்.. கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்!
நேற்று சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சிய அரங்கில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக தமிழ்நாடு நாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவியை தனக்கு கொடுத்தால் 5 கோடி ரூபாய் தருகிறேன் என ஒருவர் கூறுகிறார் என லயோலா மணி வந்து தன்னிடம் வந்து கூறினார் என்றும், ஆனால் 500 கோடி ரூபாய் கொடுத்தாலும் காசு வாங்கி கொண்டு பதவி வழங்க மாட்டேன், அந்த பதவி உரிய நபருக்கு தான் வழங்கப்படும் என்று கூறினேன் என்றும் அவர் பேசினார்.
மேலும் யாரிடமும் 1 ரூபாய் கூட வாங்காமல், அந்த பதவிக்கு தகுதியானவரான நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் பேசியிருந்தார்.
லஞ்சம் கொடுக்க ஒருவர் முன்வந்தும் அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் நடவடிக்கை எடுக்காமல், அதனை மேடையில் பேசியது ஏன் என அமைச்சர் ராஜ்மோகன் மீதும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லயோலா மணி மீதும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியதை ஆதாரமாக கொண்டு ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த விவகாரத்தில் தவெக அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், லயோலா மணியிடம் கொடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட அந்த 5 கோடி ரூபாயைக் கொடுக்க முன்வந்தது யார்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைதளப் பக்கத்தில், "இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி ரூபாய் வரை பேசப்பட்ட பேரம் குறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததன் பின்னணி என்ன?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தவெக ஆட்சியில், அரசுப் பதவிக்கு 5 கோடி ரூபாய் வரை பேரம் பேசுவதற்கும், இடைத்தரகர் வேலை பார்ப்பதற்கும்தான் லயோலா மணிக்குத் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பதவி வழங்கப்பட்டதோ என்ற கேள்வி பலரின் மத்தியில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

