\
Sanskrit mantras were chanted at the wedding ceremony
Sanskrit mantras in wedding ceremonyDMK

சமஸ்கிருத மந்திரங்கள்.. திமுகவில் இருந்து எழுந்த எதிர்ப்பு : விவாதமான துரைமுருகன் இல்லத் திருமணம்!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத் திருமண நிகழ்ச்சில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

திமுகவின் பொதுச்செயலாளரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான துரை முருகனின் பேத்தியும், திமுக எம்.பி கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரைக்கும், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திட்டக்குடி கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவிக்கும் இடையேயான திருமண விழா நேற்று நடைபெற்றது. இந்த திருமணத்தின்போது சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டு திருமண சம்பிரதாயங்கள் நடைபெற்ற வீடீயோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது.

இந்த நிலையில், திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான செந்தில் குமார் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "மேடைகள் தோறும் சுயமரியாதை திருமணங்களை பிரகடனப்படுத்திய கொள்கை பிடிப்புள்ள கழகத்தில், அதனை கடைபிடிக்க கூடிய வாய்ப்பினை தவறவிட்டதில் தனிபட்ட முறையில் உடன்படவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். இது துரைமுருகனின் இல்ல திருமண விழாவை குறிப்பிட்டு அவர் கூறியதாகவே பார்க்கப்பட்டது.

அதோடு, மூத்த திராவிட இயக்க தலைவரான சு.ப.வீரபாண்டியன் தனது சமூக வலைத்தளபக்கத்தில், "என் பெருமதிப்பிற்குரிய -என்னிடம் பேரன்பு காட்டும், திமு கழகத்தின் பொதுச்செயலாளர், அண்ணன் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் பார்ப்பனர்களின் சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டு, இப்போதும் வலிக்கிறது என் இதயம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரம் சு.ப.வீரபாண்டியனின் இந்த கருத்துக்கு பிரபல ஜோதிடரும், பாஜக நிர்வாகியுமான ஷெல்வி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "மந்திர ஒலி கேட்டால் இவர்களுக்கு இதயம் வலிக்கிறது, இப்படியே பேசிக்கொண்டு இருங்கள் தமிழ்நாடு மக்கள் மொத்த தலைவலியும் கொடுப்பார்கள் என்றும், இந்து தர்மத்தின் உடைய மந்திரங்கள் என்றாலே உங்களுக்கு கசப்பாக தான் இருக்கும், அவருடைய சம்பந்தி வீட்டுக்கு மந்திர வழி கூடாது என்று ஏதாவது இருக்கா" என்றும் விமர்சித்துள்ளார்.

சமஸ்கிருத மந்திரங்கள் ஓத நடைபெறும் திருமணங்களை எதிர்த்து பெரியார் சுயமரியாதை திருமணங்களை நடத்தினார். இந்த சூழலில் பெரியார் பாதையை பின்பற்றும் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்ல திருமணம் சமஸ்கிருத மந்திரங்கள் ஓத நடைபெற்றுள்ளது சமூகவலைத்தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sanskrit mantras were chanted at the wedding ceremony
தமிழ்நாட்டில் நிலுவையில் 18,518 போக்சோ வழக்குகள்.. எங்கே தாமதம்? நீதி எப்போது?