“பெண்களுக்கு மரியாதை தரும் கட்சி..” - திமுகவில் இணைந்தபின் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா பேட்டி!
சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில், நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா தன்னை திராவிட முன்னேற்ற கழகத்துடன் இணைத்துக் கொண்டார்.
இந்த நிகழ்வின் போது கழக பொருளாளர் டி.ஆர்.பாலு, கழக முதன்மைச் செயலாளர் அமைச்சர்கள் கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
பெண்களுக்கு மரியாதை தரும் கட்சி..
திமுகவில் இணைந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த சத்யராஜின் மகள் திவ்யா கூறுகையில், ”இன்று நான் என்னை திராவிட முன்னேற்றக் கழகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் இணைந்துள்ளேன். இதனை நான் மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
ஏனெனில் நான் ஒரு ஊட்டச்சத்து நிபுணர், தமிழ்நாடு அரசு சார்பில் ஊட்டச்சத்து தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குழந்தைகளின் உடல் நலத்தை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்.
அதேபோல் முதலமைச்சர் தலைமையில் பெண்களுக்கு மிகுந்த அங்கீகாரம் அளிக்க கூடிய வகையில் புதுமைப்பெண் என்கின்ற திட்டத்தினையும் தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தி வருகின்றனர்.
என் அப்பா, என் உயிர் தோழர். என்னுடைய எல்லா முடிவுகளுக்கும் அவர் என்னுடன் துணை நிற்பார். இந்த முடிவிலும் அவர் துணை இருக்கிறார்” என்று பேசினார்.