தன்னைப் பிரதமர் போல நினைத்துக்கொள்கிறார் நிர்மலா சீதாராமன் – திருமாவளவன்

எதேசதிகாரப் போக்கில் எதிர்க்கட்சிகளையும், அரசியலமைப்பு சட்டத்தையும் பொருட்படுத்தாமல் எம்பிக்களை இடைநீக்கம் செய்துவிட்டு மசோதாக்களை நிறைவேற்றுகிறது பாஜக அரசு என்று தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
Thirumavalavan
Thirumavalavanpt desk

தந்தை பெரியாரின் 50வது நினைவு தினத்தை ஒட்டி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்...

Thirumavalavan
Thirumavalavanpt desk

அரசியலை நீர்த்துப் போகச் செய்வதற்கு சில சனாதன சக்திகள் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து பெரியாருக்கு எதிரான அவதூறுகளை பரப்பி வருகின்றனர். பெரியார் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு உரியவர் அல்ல, ஒட்டுமொத்த விளிம்பு மக்களுக்குமானவர் என்பதை உணராத சனாதன சக்திகள் தொடர்ந்து தங்களது காழ்ப்புணர்வை கக்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வீழ்த்துகின்ற முயற்சியில் அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி என்னும் பெயரில் ஓரணியில் திரண்டு சமூக நீதிக்கான போராளிகள் ஒன்றிணைந்துள்ளோம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் சனாதன சக்திகளை விரட்டியடிப்போம்.

பாரதிய ஜனதா அரசு ஆட்சி பொறுப்பேற்ற காலத்தில் இருந்து தொடர்ந்து எதேசதிகார போக்கை கடைபிடிக்கிறது. அவர்கள் எதிர்க்கட்சியை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அரசியலமைப்பு சட்டத்தையே மதிப்பதில்லை. அவர்கள் விரும்பியதைப் போல சட்ட மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றனர். அப்படிதான் இந்த கடைசி கூட்டத் தொடரில் சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்துவது, விவாதிப்பது ஆகிய அமர்வில் முக்கிய மூன்று சட்ட மசோதாக்களை நிறைவேற்றி விட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு எதிர்ப்பு இல்லாமல் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

Parliment
Parlimentpt desk

இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. நாட்டு மக்கள் இதனை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் உரிய பாடத்தை கற்பிப்பார்கள். வருகிற 29ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மின்னணு வாக்குப்பதிவு முறை கூடாது, வாக்கு சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்தியா கூட்டணியில் இது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் இந்த கருத்துக்கு பேராதரவு தர வேண்டும்.

வெல்லும் ஜனநாயக மாநாடு தவிர்க்க முடியாத காரணத்தினால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 23ம் தேதி நடைபெறுவதாக அறிவித்திருந்த மாநாடு 29க்கு தள்ளி வைத்திருந்த நிலையில், தற்போது தென் மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கான மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் இந்த மாநாட்டை ஜனவரி இறுதி வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளோம்.

Ponmudi
Ponmudi Twitter

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான ஊழல் குற்றச்சாட்டு சிறை தண்டனையை சட்டப்படி எதிர்கொள்வதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்த வழக்கறிஞர்கள் அனைத்து முயற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் பொன்முடியும் மேல் முறையீட்டிற்கு ஆயத்தமாகி இருக்கிறார். சட்டப்படி உரிய தீர்வை அவர்கள் பெறுவார்கள் பாஜகவை சார்ந்தவர்கள் ஊழல் குறித்து பேசுவதற்கு அருகதை அற்றவர்கள். மெகா ஊழல் CAG அறிக்கையின் படி இதுவரையில் எந்த ஆட்சியிலும் நடைபெறாத அளவிற்கு மிக மோசமான முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஊழல் ஆட்சியாக இந்த ஆட்சி விளங்குகிறது. ஆகவே பாஜகவை சார்ந்தவர்கள் ஊழல் ஒழிப்பை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் அற்றவர்கள்.

ஆண்டுதோறும் தமிழக அரசுக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை தான் வழங்கியுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதி. ஆனால், பாதிப்புக்கு ஏற்றவாறு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்பதுதான் அரசின் கோரிக்கை, அதை இந்திய ஒன்றிய அரசு பொருட்படுத்தவே இல்லை. 21 ஆயிரம் கோடி ரூபாயை தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்த நிலையில், சிறப்பு நிதி ஒரு தம்படி பைசா கூட வழங்கப்படவில்லை. ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டிய நிதியை வழங்கிவிட்டு தாங்கள்தான் அதில் கரிசனம் உள்ளவர்கள் என்பதைப் போல காட்டிக் கொள்கிறார்கள்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன் கோப்பு புகைப்படம்

குறிப்பாக நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசியது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் தம்மை பிரதமராக எண்ணிக் கொண்டு பேசுவதைப் போல ஒரு தொனியை வெளிப்படுத்துகிறார். இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இதுபோன்ற பேச்சுக்களின் மூலம் தமிழக மக்களின் உணர்வை அவர் காயப்படுத்துகிறார் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com