"சாதி, மத அடையாளங்கள் மாணவர்களுக்கு தேவையில்லை" – அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்!
மதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாடு, பாஜகவின அரசியல் மாநாடாக பார்க்கப்பட்டது. இந்த மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்து போடப்பட்ட வீடியோ பேசுபொருளான நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியபோது... பள்ளி செல்லும் மாணவர்கள் திருநீறு, ருத்ராட்சம் அணிந்து செல்ல வேண்டும் என பேசியிருந்தார். இதற்கு பலரும் கண்டனக்குரல் எழுப்பினர். இந்நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ், அண்ணாமலையின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஓன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தமிழ் சமூகத்தின் ஆகச் சிறந்த அடையாளத்தை தவிர வேறு எந்த சாதி, மத அடையாளங்களும் மாணவர்களுக்கு தேவையில்லை. மதத்தால், சாதியால் மாணவர்களை அடையாளப்படுத்த நினைப்பது நல்ல அணுகுமுறை அல்ல என்று அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலளித்துள்ளார்.