”நான் தவறு செய்துவிட்டேன்...” - நீதிமன்றத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் வைத்த கோரிக்கை!
கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று நடிகர் ஸ்ரீகாந்தின் சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா முதல் குறுக்குத் தெருவில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது காலியான கொக்கைன் பாக்கெட்கள் 8 கைப்பற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து அதில் உள்ள கைரேகைகளை தடயவியல் துறையினர் பதிவு செய்தனர். மேலும் நடிகர் ஸ்ரீகாந்தின் ரேகையையும் எடுத்ததோடு அவரிடம் இருந்து ஒரு கிராம் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட 8 கொக்கைன் காலி பாக்கெட்களில் சிறிது சிறிதாக கொக்கைன் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனை போலீசார் பரிசோதனை செய்வதற்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையே நேற்றிரவு எழும்பூர் பெருநகர குற்றவியல் 14 வது நீதிமன்ற நடுவர் தயாளன் முன், கைதான நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது தான் போதைப்பொருளை பயன்படுத்தி தவறு செய்து விட்டேன் தனது மகனை கவனித்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் பிரச்னைகள் அதிகமாக இருக்கிறது எனக் கூறி நடிகர் ஸ்ரீகாந்த் ஜாமீன் கேட்டதாக தெரிகிறது. ஆனால், ஜாமீன் NDPS சிறப்பு நீதிமன்த்தில் தான் பெற முடியும் என்று கூறி நீதிமன்ற நடுவர், நடிகர் ஸ்ரீகாந்திற்கு நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டார்.