“பொங்கலுக்குப் பிறகும் ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்படும்” - அமைச்சர் காமராஜ்
பொங்கல் பண்டிகைக்குப் பிறகும் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிக்கையையொட்டி அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 7 ஆம் தேதி முதல் அனைத்து ரேசன் கடைகளிலும் பொங்கல் பொருட்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டு வந்தன.
பொங்கல் பொருட்கள் பெரும்பாலும் வினியோகிக்கப்பட்டு விட்டது. தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியூரில் இருந்து வர முடியாதவர்கள் மட்டும் பொங்கல் பொருட்கள் மற்றும் பரிசை வாங்கவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பொங்கல் பண்டிகைக்குகுப் பிறகும் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.
நகரங்களிலிருந்து வெளியூர் சென்றவர்கள், ஆயிரம் ரூபாய் வாங்காமல் இருந்தால், பண்டிகை முடிந்த பின்னர் வந்து, உரிய ஆவணங்களைக் காண்பித்து ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் கூறினார்.

