’அதிமுக டெபாசிட் இழக்கப்போகிறார்கள்..’ - அமைச்சர் அன்பரசன் விமர்சனம்!
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் அன்பரசன், அதிமுகவின் நிலையை விமர்சித்தார். திமுகவின் கூட்டணி பலம் மற்றும் கொள்கை வெற்றியை அடையும் என நம்பிக்கை தெரிவித்தார். அதிமுக பாஜகவுடன் இணைந்ததால் பல தொகுதிகளில் டெபாசிட் இழக்க வாய்ப்பு உள்ளதாக கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர் அன்பரசன், "இன்றைக்கு அரசியல் களம் சூடாக இருக்கிறது. ஒரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி, பாவம் ஊர் ஊராக சுற்றுகிறார். ஒரு பக்கம் முந்தானத்து பொறந்த ஒருவர் நாங்க தான் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லி ஒரு பக்கம் சுத்திக்கிட்டு இருக்காரு. இன்னைக்கு கண்டவன் எல்லாம் தெரு தெருவா சுத்திகிட்டு இருக்கான். இன்று அரசியல் களம் தமிழ்நாட்டில் சூடாயிருக்கிறது. இன்று நம் தலைவர் நல்ல கூட்டணி, கொள்கை கூட்டணி, பலமான கூட்டணி அமைத்திருக்கிறார்.
எப்பவுமே நான் முன்கூட்டியே சொல்லுவேன் பல்ஸ் எப்படி இருக்குன்னு சொல்லுவேன். இந்த தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும். அதிமுக பொருத்தவரையில் தனியாக நின்றிருந்தால் கூட இரண்டு ஓட்டு அதிகமாக வாங்கி இருக்கும். தற்போது பாஜகவுடன் போய் சேர்ந்தார்களோ பல தொகுதிகளில் டெபாசிட்டை இழக்கப் போகிறார்கள்.
விஜயை விமர்சித்த அன்பரசன்!
நம்முடைய கட்சிக்கு 75 வயது. கலைஞர், ஸ்டாலின் செய்தது போல யாராவது சாதனை செய்ய முடியுமா? நாம் பார்க்காத ஆளு யாரு? எவன் எவனையோ பார்த்தோம் நம்ம. நம்மள அழிச்சிடுவேன் ஒழிச்சிடுவேன்னு சொன்னவனெல்லாம் பார்த்தோம். தம்மா துண்டு பையன் வந்து எங்களுக்கும் திமுக காரனுக்கும் தான் போட்டின்னு சொல்ற உன்னை பார்க்க மாட்டோமா? நாங்க.
காஞ்சிபுரத்தில் 25 வருடங்களுக்கு முன்பு ஒரு வெள்ளை காக்கா வந்தது. கால்நடை மருத்துவர்கள் அதை கூண்டில் போட்டு வைத்திருந்தார்கள். அந்த வெள்ளை காக்காவை பார்ப்பதற்கு 3 1/2 கிலோ மீட்டர் லைனில் நின்றார்கள். அதே போல தான் இவன் எல்லாம். ஒரு நடிகரை சினிமாவில் பார்க்கிறவர்கள் நேரில் எப்படி இருப்பான் என்று பார்க்க வருவார்கள். பார்த்துவிட்டு போவான். ஏடிஎம்கேயிலிருந்து போவான். ரோட்டில் போறவன் எல்லாம் போவான். அதனால அவருக்குத்தான் ஓட்டு போடுவான் என்று நினைக்காதே. ஜனங்களோட பல்ஸ் எங்களுக்கு தெரியும்" என்று கூறினார்.

