தவறைச் சுட்டிக்காட்டிய சபாநாயகர்.. ஒரு நொடியில் மாறிய அமைச்சரின் முகம்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், முழுமையான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம், இன்று சட்டசபையில் மீண்டும் தொடங்கியது. அப்போது சட்டமன்றப் பேரவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, உரிமை மீறல் பிரச்னை மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து அவையில் பேச அதிமுக தரப்பில் கோரப்பட்டது.
அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்காத காரணத்தால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் மேகதாது அணை குறித்துப் பேசும்போது, காவிரி விவகாரத்தில் கர்நாடகம் தமிழகத்திற்குத் தரவேண்டிய அளவு குறித்து தவறாகக் குறிப்பிட்டார். உடனடியாக திமுக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து, சபாநாயகர் திருத்திக் கொள்ளும்படி அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

