மேகதாது விவகாரம் | பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், முழுமையான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம், இன்று சட்டசபையில் மீண்டும் தொடங்கியது. அப்போது சட்டமன்றப் பேரவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, உரிமை மீறல் பிரச்னை மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து அவையில் பேச அதிமுக தரப்பில் கோரப்பட்டது. அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்காத காரணத்தால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து அவையில் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், மீண்டும் ஒரு நடுவர் மன்றம் வேண்டும் எனச் சொல்வது ஏன் என சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

