\
மேட்டூர் அணை
மேட்டூர் அணைANI

சரிந்து வரும் மேட்டூர் அணை நீர்மட்டம்.. சம்பா சாகுபடி பாதிக்கப்படும் அபாயம்!

காவிரிப் படுகை விவசாயிகளின் வாழ்வாதாரமான சம்பா சாகுபடிக்கு இந்த ஆண்டு கடுமையான சோதனைக்காலம் உருவாகியுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருவதால் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Published on
Summary

காவிரி படுகையின் உயிர்நாடியான மேட்டூர் அணை நீர்மட்டம் 88 அடிக்கு கீழ் சரிவதால், இந்தாண்டு சம்பா சாகுபடி பரப்பு 4–5 லட்சம் ஏக்கருக்கு குறையக்கூடும் அபாயம் உருவாகியுள்ளது. கடந்தாண்டு 26.25 லட்சம் ஏக்கரில் நடந்த சம்பா, இம்முறை தண்ணீர் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில், நெல் உற்பத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்து விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரிப் படுகையில் விவசாயத்தைத் தீர்மானிக்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம், தற்போது 88 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது. இதனால், இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்யும் பரப்பு 4 முதல் 5 லட்சம் ஏக்கராகக் கடுமையாகக் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 14 லட்சம் ஏக்கர் உள்படத் தமிழ்நாடு முழுவதும் 26.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற சம்பா சாகுபடி, இந்த ஆண்டு போதிய தண்ணீர் இன்றி முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 87.82 அடியாகவும், நீர் இருப்பு 50.19 டி.எம்.சி. யாகவும் சரிந்துள்ளது.

mettur dam
mettur damPt web

இதனிடையே, கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய 63 டி.எம்.சி. காவிரி நீரை வழங்காமல் தொடர்ந்து நிலுவையில் வைத்திருப்பது இந்தச் சிக்கலை மேலும் பெரிதாக்கியுள்ளது. இந்தத் தண்ணீர் பற்றாக்குறையால் காவிரி பாசன மாவட்டங்களில் 60 முதல் 70 விழுக்காடு அளவுக்கு விவசாயம் பாதிக்கப்பட்டு, சுமார் 16 முதல் 17 லட்சம் டன் வரை நெல் உற்பத்தி குறையக்கூடும் என வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

கடைமடைப் பகுதி வரை தண்ணீர் சென்று சேருமா என்ற விவசாயிகளின் அச்சமும், உணவுப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், விவசாயிகள் கடுமையான பொருளாதார இழப்பைச் சந்திக்கும் அபாயம் உருவாகியுள்ளது. நம்பியிருக்கும் நிலங்களைக் காப்பாற்றத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் விவசாயிகள், எதிர்வரும் வடகிழக்குப் பருவமழையாவது முழுமையாகப் பெய்து கண்ணீரைத் துடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் காவிரி படுகை விவசாயிகள்.

மேட்டூர் அணை
விடுமுறையில் நெரிசலால் திணறும் சென்னை- திருச்சி சாலை! 8 வழிச்சாலையாக மாறுமா? தீர்வு என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com