விடுமுறையில் நெரிசலால் திணறும் சென்னை- திருச்சி சாலை! 8 வழிச்சாலையாக மாறுமா? தீர்வு என்ன?
பண்டிகை காலம், தொடர் விடுமுறை நாட்கள் என்றாலே சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களால் நிரம்பி வழிகிறது, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை. செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி வழியாக செல்லும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கான முக்கிய இணைப்பாக உள்ளது.
சாதாரண நாட்களில் சுமார் 35 ஆயிரம் வாகனங்கள் செல்லும் நிலையில், வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை 95 ஆயிரமாகவும், பண்டிகை காலங்களில் சுமார் ஒன்றரை லட்சமாக அதிகரிப்பதாகவும் போக்குவரத்து மேம்பாட்டு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் 6 மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை 10 மணி நேரம் வரை பயணிக்க வேண்டிய நிலையால் பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்திப்பது தொடர்கதையாகிறது.
இதன் தாக்கம் சென்னையில் இருந்து திருச்சி வரை அமைந்துள்ள சுங்கச்சாவடிகளிலும் வெளிப்படுகிறது. பரனூர், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருமாந்துறை உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் பண்டிகை நாட்களில் வாகன எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
என்ன தான் தீர்வு?
வாகனப் பெருக்கம் இன்றைய பிரச்சினை மட்டுமல்ல, அடுத்த 25 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை 3.2 முதல் 3.5 லட்சம் வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதே எதிர்கால தேவையை கருத்தில்கொண்டு புதிய விரைவுச்சாலை, சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலப் பணிகளை விரைவாக முடித்து, மாற்று வழித்தடங்களை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. எதிர்காலத்துக்கான தேவையைப் பற்றி யோசிக்கும்போது, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தில் இருக்கும் கிராம மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் கேட்பது அவசியமாக இருக்கிறது.
வாகனப் போக்குவரத்து அதிகரித்துவருவதால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை எட்டுவழிச் சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதேநேரத்தில், சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 300 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய பசுமைவழி விரைவுச் சாலை அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
ACCESS- CONTROLLED CORRIDORஆக இந்தச் சாலை அமைந்தால், சென்னை–திருச்சி பயண நேரத்தை 6 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலம் கையகப்படுத்தும் சிக்கலை தவிர்க்க, கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி வரை தற்போதைய சாலைக்கு இணையாக புதிய 4 வழிச்சாலை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசீலனையில் உள்ள எந்தத் திட்டம் இறுதியானாலும், எதிர்கால தேவையை கருத்தில்கொண்டு விரைவாக செயல்படுத்தி, பயண நேரத்தையும் நெரிசலையும் குறைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

