திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. நெல்லை மாநகர பகுதியான டவுண், பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அம்பாசமுத்திரம், களக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. திசையன்விளையில் கனமழை பெய்ததால் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இதேபோல் தூத்துக்குடி மாநகரம், திருச்செந்தூர், உடன்குடி, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.