தமிழக மருத்துவ கட்டமைப்பு நாட்டிலேயே சிறந்தது என்பதில் சந்தேகமில்லை; இதையும் கொஞ்சம் கவனிக்கலாமே!

குறைவான ஊழியர்கள் அதிகமான ஊதியத்தை செய்யும் போது கண்டிப்பாக சில பிழைகள் வரத்தான் செய்யும். இது மிக முக்கியமான துறை என்பதால் அதற்கு தகுந்தார்போல் செயல்பட வேண்டும்.
Medical framework
Medical frameworkpt web

தமிழ்நாடு மருத்துவக் கட்டமைப்பில் சிறந்து விளங்குகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. ஏனெனில் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை குறைத்து மதிப்பிட முடியாது. 2021 - 2022 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, 5000 மக்கள் தொகைக்கு ஒரு துணை சுகாதார நிலையம் என மொத்தம் 8713 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன.

30000 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என மொத்தம் 1807 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. இதனை அடுத்து இரண்டாம் நிலை, உயர்நிலை மருத்துவமனைகள் அமைந்துள்ளன. இதனைத் தாண்டி காவல்துறையினர், தொழிலாளர் ஈட்டுறுதிக் கழக மருத்துவமனைகள் போன்ற சிறப்பு மருத்துவமனைகளும் அடங்கும்.

மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தவரை 25 அரசு மருத்துவக் கல்லூரிகள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 2 அரசு மருந்தாளுநர் கல்லூரிகள், 3 அரசு இயன்முறை மருத்துவக் கல்லூரிகள், 6 அரசு செவிலியர் கல்லூரிகள், 25 செவிலியர் பயிற்சிப் பள்ளிகள், 38 மருத்துவமனைகள் மற்றும் அதனோடு இணைந்த நிலையங்கள், 1 பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, 4 மகப்பேறு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, 5 காச நோய் மருத்துவமனை, குழந்தைகள் மருத்துவமனை, மன நல மருத்துவமனை தலா ஒன்றும் அமைந்துள்ளது. (குறிப்பு; இவையாவும் 2021- 2022 கணக்கெடுப்பின் படி அமைந்தது).

இத்தனை வசதிகள், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகளவு கட்டமைப்புகள் இருந்தும் ஆங்காங்கு நடக்கும் சில தவறுகள் மொத்த மருத்துவத்துறையையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றன. போதிய மருத்துவர்கள் இல்லை, ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனை, படுக்கை வசதிகள் குறைபாடு போன்ற பல பிரச்சனைகள் தொடர்ந்து விவாதத்திற்கு வந்து கொண்டே இருக்கின்றன.

மருத்துவர் அமலோற்பவநாதன்
மருத்துவர் அமலோற்பவநாதன்

இந்த கட்டுரைத் தொகுப்பில் தமிழ்நாட்டின் சிறப்பான மருத்துவ கட்டமைப்பு குறித்தும் இன்னும் சரி செய்து கொள்ளப்பட வேண்டிய சில பிரச்சனைகள் குறித்தும் மருத்துவர்கள் சொல்லும் கருத்துகளை பார்க்கலாம். இது குறித்து பேச மருத்துவர் ஷாந்தி ரவீந்திரநாத் மற்றும் மருத்துவர் அமலோர்பவநாதன் இருவரையும் தொடர்பு கொண்டோம்.

மருத்துவ கட்டமைப்பு மிகச்சிறப்பு!!

மருத்துவர் அமலோற்பவநாதன் கூறுகையில், “தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு மிகச் சிறப்பாக உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கு 3 கட்டங்களாக மருத்துவ கட்டமைப்பு உள்ளது. அனைத்து மாவட்டத்திற்கும் மருத்துவக் கல்லூரிகள் வந்துவிட்டது. உயர்தர மருத்துவ சிகிச்சை அனைத்து தரப்பிற்கும் கிடைக்குமளவிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மருத்துவ கட்டமைப்பிற்கு தேவைப்படும் பணத்தை விட அதிகளவில் நாம் செலவழித்து வருகிறோம்.

மக்களைத்தேடி மருத்துவத்தை இன்னும் நாம் அதிகரிக்கனும். செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக ஆக்கவேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்” என்றார்.

இதில் மருத்துவர் ஷாந்தி கூறுகையில், “மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. ஆனாலும் தமிழ்நாட்டை விட கேரளா சிறப்பாக இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

மருத்துவத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி பல்வேறு திட்டங்களுக்காக செலவிடப்படுகிறது. அதில் முதன்மையாக உள்ளவைகள் சில. அதில் இன்சுரன்ஸ், முத்துலட்சுமி ரெட்டி திட்டம், மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பு போன்ற பல பிரிவுகளில் ஒதுக்கப்படும் நிதிகள் செலவிடப்படுகின்றன. ஆனால் திமுக தனது தேர்தல் அறிக்கையில், மருத்துவத்திற்க்கும் கல்விக்கும் செலவிடப்படும் தொகையை மூன்று மடங்கு அதிகரிப்போம் என சொன்னார்கள். ஆனால் அப்படி அதிகரிக்கவில்லை. கொஞ்சம் குறைந்துள்ளது. அதற்கு காரணமாக அவர்கள் சொன்னது 11 மருத்துவக் கல்லூரி கட்ட நிதி ஒதுக்கியுள்ளதால் பிற திட்டங்களுக்கு ஒதுக்க முடியவில்லை என சொன்னார்கள்.

முத்து லட்சுமி ரெட்டி திட்டம் முத்தாய்ப்பான திட்டம்

கொரோனாவிற்கு பிறகு அரசு மருத்துவமனைக்கு வரும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்கள் எண்ணிக்கைக்கு தகுந்தார் போல் அதன் கட்டமைப்பையும் அதிகப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கு தேவையான நிதி ஆண்டாண்டுக்கு அதிகப்படுத்தப்படவில்லை என்று பார்க்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.

முத்துலட்சுமி ரெட்டி திட்டம் என்பது மிக முக்கியமான திட்டம். அதற்கான நிதியும் சரியான அளவில் ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு செல்ல வேண்டும். மத்திய அரசின் பணம் அதில் வந்தாலும் மாநில அரசின் பணம் அதில் அதிகம். ஆனாலும் இணையத் தொடர்பு சரியாக இல்லை என்பதை காரணம் காட்டி கர்ப்பிணி பெண்களுக்கு சரியான நேரத்தில் பணம் செல்லாத நிலை உள்ளது. அமைச்சரும் அதை ஒப்புக் கொண்டுள்ளார். கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் பெட்டகமும் சரியான நேரத்தில் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. முத்து லட்சுமி ரெட்டி திட்டம் என்பது மிக முக்கியமான திட்டம். அதில் கொடுக்கப்படும் 18 ஆயிரம் என்பது மிகப் பெரிய தொகை. மற்ற மாநிலங்களில் இந்த அளவிற்கு கொடுக்கப்படவில்லை. இதில் மத்திய அரசும் மிகக் குறைவான தொகையைத் தான் அவர்களது பங்காக கொடுக்கிறார்கள். எனவே முத்தாய்ப்பான திட்டமான முத்துலட்சுமி ரெட்டு திட்டத்தில் எவ்வித தொய்வும் இல்லாமல் இருப்பதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழகத்தின் மிக முக்கியமான விஷயம், அனைத்து விதமான சிகிச்சையும் இலவசமாக வழங்கப்படும் என்பது தான். தமிழ்நாடு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் ஒரு வருடத்திற்கு 2000 கோடி வரை இன்சுரன்ஸ் ஏஜென்சீஸ்க்கு கொடுக்கும் போது அரசு மருத்துவமனைகளிலும் அந்த சேவை பெறப்படுகிறது.

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் இருந்தது. இப்போது 36 மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. உயர்தர சிகிச்சை அளிக்கும் அளவிற்கு மாவட்ட மருத்துவமனையில் மருத்துவக் கட்டமைப்பு உள்ளது. அப்படி இருக்கும் போது அரசு மருத்துவமனையில் ஹெல்த் இன்சுரன்ஸ் என்ற ஸ்கீம் தேவையில்லை. அரசு மருத்துவமனையில் இல்லாத சில சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் செய்யப்படுகின்றன என்றால் அதற்கு மட்டும் இன்சுரன்ஸ் கொடுப்பது சரியாக இருக்கும்.

செலவுகளைக் குறைக்க வேண்டும்

அப்படி கொடுக்கும் பணத்தை பொது மருத்துவத்தில் செலவளித்தால் மருத்துவத்துறையில் பணிபுரியும் செவிலியர்கள் மற்ற தொழில்நுட்ப ஊழியர்கள் போன்றவர்களுக்கு நல்ல ஊதியம் வழங்க முடியும். குறைவான ஊழியர்கள் அதிகமான ஊதியத்தை செய்யும் போது கண்டிப்பாக சில பிழைகள் வரத்தான் செய்யும். இது மிக முக்கியமான துறை என்பதால் அதற்கு தகுந்தார்போல் செயல்பட வேண்டும்.

இன்னும் செலவுகளை குறைக்க வேண்டுமானால் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலமாக சில மருந்துகள் மேலும் சில பொருட்களை வாங்குகிறார்கள். இதனை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலமாக பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யும் போது மிகக் குறைந்த விலையில் தரமான மருந்துகள் தட்டுப்பாடுகள் இன்றி வாங்க முடியும். அரசிடமும் சில மருந்து நிறுவனங்கள் உள்ளன. அதை மேம்படுத்தி அரசே பல மருந்துகளை உற்பத்தி செய்யும் போது செலவு மிக குறையும், அது தரமாகவும் இடுக்கும், தட்டுப்பாடுகள் இன்றியும் கிடைக்கும். அதை வெளியில் விற்கும் போது லாபமும் கிடைக்கும். நிதி எவ்வளவு இருக்கிறது என்பதை விட இருக்கும் நிதியை எப்படி செலவு செய்கிறோம் என்பது மிக முக்கியம்.

அடுத்தபடியாக நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களோ செவிலியர்களோ இல்லை. மருத்துவர்கள், செவிலியர்கள் என்பதைத் தாண்டி மருந்தாளுநர்கள் பிற தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்றோரும் தேவைப்படும் அளவிற்கு பணியமர்த்தப்பட வேண்டும். பல ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளில் 18 ஆயிரத்தில் இருந்து 19 ஆயிரம் மருத்துவர்கள் வரை தான் உள்ளனர். ஆனால் இத்தனை மருத்துவக் கல்லூரிகள் வந்துள்ளது. எனவே பணியிடங்கள் அதிகளவில் உருவாக்கப்பட்டு மருத்துவர்களை அதிகளவில் பணியமர்த்த வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com