மயிலாடுதுறை: வீட்டின் கதவை உடைத்து 19 சவரன் நகை கொள்ளை - 4 பேர் கைது
செய்தியாளர்: ஆர்.மோகன்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து கடந்த 11ஆம் தேதி 19 சவரன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போனது. இது குறித்து கார்த்திகேயன் பெரம்பூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் காரைக்கால் மங்கைநல்லூர் சாலையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தியுள்ளனர். அதில் வந்த 3 பேர் காரை நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். அப்போது வழுக்கி கீழே விழுந்ததில் தென்காசியைச் சேர்ந்த அஜ்மீர் என்பவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அஜ்மீர் தனது சிறை நண்பர்களான திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதாப் (22), கரண் (22), தென்காசியைச் சேர்ந்த இஸ்மாயில் சேர்ந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார், உருக்கி வைக்கப்பட்டிருந்த 19 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.