கரூர் துயரம்| தவெக நிர்வாகிகளுக்கு ஜாமீன்.. காவல் துறையின் மனு நிராகரிப்பு!
கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததே கூட்டநெரிசலுக்கு காரணம் என காவல் துறை தரப்பிலும், காவல் துறை முழுமையான பாதுகாப்பை வழங்கவில்லை, காவல் துறையின் அறிவுறுத்தல்படியே நாங்கள் செயல்பட்டோம் என்று தவெக தரப்பும் மாறிமாறி குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இந்த விவகாரத்தில், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் மத்திய நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்றக் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து, அவர்களின் 15 நாள் நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில், அவர்களிம் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. காவல்துறை தரப்பில் இருந்து நீதிமன்றக் காவலை நீட்டிக்க மனு அளிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றக் காவலை நீடிக்க முடியாது எனக் கூறி நிபந்தனையற்ற ஜாமீனில் இருவரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
முன்னதாக, கரூர் சம்பவத்தில் காயமடைந்தவர்களை மீட்பதற்காக ஆம்புலன்ஸ்கள் சென்றன. அப்போது ஒரு ஆம்புலன்ஸை தமிழக வெற்றிக் கழக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் வழிமறித்து சேதப்படுத்தி, அதன் ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதற்காக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அவரும் ஜாமீன் கோரி கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். ஆனால், இன்று அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.