”பொறுப்பு இல்லை எனக்கூறி தட்டிக் கழிக்க முடியாது” - தவெக நிர்வாகி ஜாமீன் மனு மீது நீதிபதி கருத்து
கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த துயரச் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததே கூட்டநெரிசலுக்கு காரணம் என காவல்துறை தரப்பிலும், காவல்துறை முழுமையான பாதுகாப்பை வழங்கவில்லை, காவல்துறையின் அறிவுறுத்தல் படியே நாங்கள் செயல்பட்டோம் என்று தவெக தரப்பும் மாறிமாறி குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தவெக கரூர் மத்திய நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது.
கரூர் ஆறுமுக பாளையத்தைச் சேர்ந்த தவெக கரூர் மத்திய நகரச் செயலாளர் பவுன்ராஜ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஜாமின் கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்டு செப்டம்பர் 30ஆம் தேதி முதல் நீதிமன்ற காவலில் இருக்கிறேன்.
நான் பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர் அல்ல. பொதுக்கூட்டத்திற்கான எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு ஏற்கனவே விசாரணை தொடங்கியுள்ள சூழலில், என்னை நீதிமன்ற காவலில் வைப்பது தேவையற்றது. என் மீது இதற்கு முன்பாக எவ்விதமான குற்ற வழக்குகளும் இல்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன். ஆகவே இந்த வழக்கில் எனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், "நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவில் கூட மனதாரர் இல்லை எனவே ஜாமின் வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, "இந்த சம்பவத்தை பொருத்தவரை பொறுப்பு இல்லை என தட்டிக் கழிக்க முடியாது. அனைவருக்கும் பொறுப்பு உள்ளது" என குறிப்பிட்டு, வழக்கில் ஏன் சிபிஐ எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை? என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில், "சிபிஐ-யை எதிர்மனுதாரராக சேர்த்து மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.