ஊதிய உயர்வு கேட்டுப் போராடிய மாஞ்சோலை தொழிலாளர்கள்
ஊதிய உயர்வு கேட்டுப் போராடிய மாஞ்சோலை தொழிலாளர்கள்fb

ஊதிய உயர்வு கேட்டுப் போராடிய மாஞ்சோலை தொழிலாளர்கள்... தாமிரபரணியில் கொல்லப்பட்ட துயரம்!

நதியையும் ஒரு கொலைக் கருவியாக கையாண்ட அன்றைய நாளை விவரிக்கிறது இந்த தொகுப்பு!
Published on

செய்தியாளர்: முத்துப்பாண்டியன் மற்றும் அரவிந்தராஜ்

ஊதிய உயர்வு கேட்டுப் போராடிய மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 17 பேர், காவல்துறை தாக்குதலால் தாமிரபரணியில் தள்ளப்பட்டு, உயிர் துறந்த துயர தினம் இன்று. நதியையும் ஒரு கொலைக் கருவியாக கையாண்ட அன்றைய நாளை விவரிக்கிறது இந்த தொகுப்பு!

திருநெல்வேலி மாவட்டத்தின் எழில் மிகு மேற்கு தொடர்ச்சி மலையில்தான் மாஞ்சோலை, காக்காச்சி உள்ளிட்ட பல தேயிலைத் தோட்ட மலை கிராமங்கள் அமைந்துள்ளன. பல தலைமுறைகளாக காட்டை திருத்தி தேயிலைத் தோட்டங்களை வடிவமைத்த தொழிலாளர்களுக்கு, இருபதாம் நூற்றாண்டின் இறுதிவரை மிஞ்சியது என்னவோ அட்டைக் கடியும் 53 ரூபாய் தினக்கூலியும் தான்.

`எட்டு மணி நேரம் வேலையும் 150 ரூபாய் கூலி உயர்வும் கேட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கையிலெடுத்தனர். 1999 ஜூலை 23ஆம் தேதி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் இடதுசாரி அமைப்புகளுடன் பல்லாயிரக்கணக்கான தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கைகோர்த்தனர். ஊதிய உயர்வுக்காகவும், கைது செய்யப்பட்டோரின் விடுதலையை வலியுறுத்தியும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் நோக்கி அமைதியான முறையில் பேரணியாக புறப்பட்டனர்.

பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை நோக்கி நகர்ந்தபோதுதான் அந்த கோர சம்பவம் நிகழ்ந்தது. தாமிரபரணி நதிக்கரையோர சாலையை வழிமறித்து நின்ற காவல்துறையினரும், அதிரடிப்படையினரும் சேர்ந்து திடீரென பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர்.

செங்கற்களை கொண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கூட்டத்தை கலைக்கத் தொடங்கினர். இதை எதிர்பாராத தொழிலாளர்கள் நாலாப் புறமும் சிதறியடித்து ஓட, பேரணி போர்க்களமானது. காவல்துறையின் கண்மூடித்தனமான தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக, தாமிரபரணியாற்றில் குதித்து மறுகரைக்கு செல்ல முயன்றார்கள் தொழிலாளர்கள்.

நதியில் குதித்தவர்களையும் அவர்களை காப்பாற்ற முயன்றவர்களையும் லத்தியால் கொடூரமாக தாக்கி ஆற்றில் தூக்கிப் போட்டனர் காவல் துறையினர். இதில், 1 வயது குழந்தை விக்னேஷ் தனது தாய் ரத்தினமேரியுடன் சேர்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்தது. கைக்குழந்தை முதல் பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என சுமார் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது ஆட்சியிலிருந்த அன்றைய திமுக அரசோ, பேரணி சென்றவர்கள்தான் கலவரத்தை தூண்டியதாகவும், தப்பிப்பதற்காக தாமிரபரணியில் குதித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் பதிவு செய்தது.

ஊதிய உயர்வு கேட்டுப் போராடிய மாஞ்சோலை தொழிலாளர்கள்
கன்வர் யாத்திரை: உணவகங்கள் உரிமங்களைக் காட்சிப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மருத்துவ அறிக்கையும் ஆணைய அறிக்கையும்கூட அழுத்தத்தின் பேரில் அரசுக்கே சாதகமாகிப் போனது. இத்தனை போராட்டங்களையும் இழப்புகளையும் சந்தித்த தொழிலாளர்கள், இன்றும் தங்கள் வாழ்வுரிமைக்காக, நீதிமன்றத்தில் வழக்காடிக் கொண்டிருப்பதுதான் காலத்தின் கோலம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com