கன்வர் யாத்திரை: உணவகங்கள் உரிமங்களைக் காட்சிப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!
கன்வர் யாத்திரை செல்லும் வழியில் உள்ள உணவகங்கள் தங்கள் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ்களைக் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.கே. சிங் அடங்கிய அமர்வு, ’நுகர்வோர்தான் ராஜா’ என்றும், என்ன வகையான உணவு பரிமாறப்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு முடிவெடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் வலியுறுத்தியது. யாத்திரைக்காக மட்டும் அசைவம் விற்பதை நிறுத்திவிட்டு, சைவ உணவை மட்டும் வழங்கும் உணவகங்கள் பற்றிய தகவல்களை நுகர்வோர் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீதிபதி சுந்தரேஷ் குறிப்பிட்டார்.
யாத்திரையின் கடைசி நாளான இன்று உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. யாத்திரை பாதையில் உள்ள உணவங்களில் அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பெயர்களை எழுதி வைக்க வேண்டும் என்று யோகி தலைமையிலான அரசு உத்தரவிட்டிருந்தது. முஸ்லீம் உணவகங்களை தனிமைப்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவு இருப்பதாக கடும் விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.