மணப்பாறை | சாலை விபத்தில் இரு கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
செய்தியாளர்: எஸ்.காதர் மொய்தீன்,
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டியைச் சேர்ந்தவர் இன்பராஜ் (19), இவரது நண்பர் செவக்காலப்பட்டியைச் சேர்ந்த பூவரசன் (19) ஆகிய இருவரும் குளித்தலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் பிசிஏ முதலாமாண்டு படித்து வந்தனர். இந்நிலையில் இன்று மணப்பாறை அடுத்த ஆண்டவர்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மணப்பாறையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற டிப்பர் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் இருசக்கர வாகனம் முற்றிலுமாக உருக்குலைந்தது. கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.