மாமல்லபுரம் - செங்கல்பட்டு சேவை.. விடிவுகாலம் பிறக்குமா? கனவு ரயில் நகருவது எப்போது?
உலகமே வியக்கும் சிற்பக் கலையின் சிறப்பிடம்... யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற சர்வதேச சுற்றுலா தலம்... ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் குவியும் இடம்... அதுதான் நம் மாமல்லபுரம். பெருமைகள் பல இருந்தும், ரயில் சேவை வசதி இல்லாதது அந்நகருக்கு ஒரு பெரிய குறையாகவே இருக்கிறது. இன்று நேற்றல்ல, கடந்த 17 ஆண்டுகளாகக் கனவாகவே இருக்கிறது செங்கல்பட்டு - மாமல்லபுரம் ரயில் பாதை திட்டம். 525 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், 2011-ல் நாட்டப்பட்ட அடையாளக் கற்களோடு அப்படியே நின்றுவிட்டது.
நகைப்புக்குரிய விஷயம் ஒன்றும் உள்ளது. இந்தத் திட்டம் ரத்து செய்யப்படவில்லை, உயிர்ப்புடன் இருக்கிறது என்று காட்டுவதற்காக, மத்திய பட்ஜெட்டில் ஆண்டுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த ரயில் பாதை மட்டும் வந்திருந்தால், மாமல்லபுரத்திலிருந்து கேரளாவுக்கோ, ஆந்திராவுக்கோ, ஏன் வடமாநிலங்களுக்கோ செல்ல சென்னைக்கு வர வேண்டிய அவசியமே இருந்திருக்காது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாகப் பாதியிலேயே பயணத்தைத் தொடங்கியிருக்கலாம். சென்னைவாசிகளுக்கும் கடற்கரை வழியாக ஒரு ஜாலியான வார விடுமுறை சிற்றுலா சாத்தியமாகியிருக்கும். பெரும்பகுதி அரசு நிலம், குறைவான தனியார் நிலம் எனப் பாதை அமைப்பதற்கான சூழல் சாதகமாக இருந்தும், கோப்புகள் ஏன் நகரவில்லை என்பதுதான் மர்மம். சாலைப் போக்குவரத்தை மட்டுமே நம்பி நெரிசலில் சிக்கித் தவிக்கும் மாமல்லபுரத்திற்கு, இந்த முறையாவது விடிவு காலம் பிறக்குமா? வரும் பட்ஜெட்டில் அந்த ஆயிரம் ரூபாய்' சாபம் நீங்கி புதிய வரம் கிடைக்குமா ? சற்று பொறுத்திருப்போம்...

