செயலிழக்கும் பூமியின் குளிர்ச்சித் திறன்.. அதிக சூரிய வெப்பத்தை உறிஞ்சும் வடக்கு அரைக்கோளம்!
பி.என்.ஏ.எஸ் ஆய்வு முடிவுகளின்படி, 2001 முதல் வடக்கு அரைக்கோளத்தின் வெப்பத்தக்கவைப்புத் திறன் அதிகரித்து வருகிறது. பனிப்பாறைகள் உருகுவதால் வெப்பம் அதிகரிக்க, காற்று மாசு குறைவதால் சூரிய ஒளி அதிகமாக ஊடுருவுகிறது. இதனால் பூமியின் குளிர்ச்சித் திறன் குறைந்து, உலகளாவிய காலநிலையில் மாபெரும் தாக்கம் ஏற்படுகிறது.
பி.என்.ஏ.எஸ் (PNAS) இதழில் வெளியான இரண்டாயிரத்து 25ஆம் ஆண்டின் ஆய்வு முடிவுகளின்படி, 2001ஆம் ஆண்டிலிருந்து வடக்கு அரைக்கோளத்தின் வெப்பத்தக்கவைப்புத் திறன் ஒவ்வொரு பத்துஆண்டுகளுக்கும் ஒரு சதுர மீட்டருக்கு பூஜ்ஜியம் புள்ளி மூன்று நான்கு வாட்ஸ் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. இதுஒரு சிறிய மாற்றமாகத் தோன்றினாலும், உலகளாவிய காலநிலையில் இது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
இந்த மாற்றத்துக்குப் பின்னால் பல முக்கியக் காரணங்கள் உள்ளன. வடதுருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகுவதால், சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் வெண்ணிறப் பரப்புகுறைந்து, வெப்பத்தை உறிஞ்சும் கருமையான நிலப்பரப்பும் கடல் பரப்பும் அதிகரித்துவருகின்றன. அதேசமயம், ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் காற்று மாசு குறைந்துவருவதால், வளிமண்டலம் சுத்தமாகி சூரிய ஒளி ஊடுருவுவது அதிகரித்துள்ளது. இது நல்லது என்றாலும், சூரிய வெப்பத்தைப்பிரதிபலிக்கும் துகள்கள் குறைந்துள்ளதால் புவி வெப்பமாதல் அதிகரித்துள்ளது.
இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பூமியின் குளிர்ச்சித்திறன் செயலிழக்கத் தொடங்கியுள்ளது. அதிகரித்த வெப்பத்தைச் சமன் செய்ய மேகக்கூட்டங்கள் அதிகமாக உருவாகும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போதைய தரவுகளின்படி மேகங்கள் அந்தச் சமநிலையை மீட்க உதவவில்லை என்பது தெரியவந்துள்ளது.
துருவங்களுக்கு இடையிலான வெப்ப இடைவெளி அதிகரித்தால், உலகெங்கிலும் மழைப்பொழிவு மாறும், மேலும் புயல்கள் உருவாகும் பாதையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். பூமியின் தற்காப்பு அரண்கள் பலவீனமடைந்து வருவதையே இந்த ஆய்வு நமக்கு உணர்த்துகிறது.

