மல்லை சத்யா மதிமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்.. வைகோ அதிரடி.. அடுத்த திட்டம் என்ன?
விளக்கத்தில் திருப்தி இல்லை எனக்கூறி மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவித்துள்ளார்.
வாரிசு அரசியல்.. வைகோவிற்கும் மல்லை சத்யாவிற்கும் இடையே மோதல்!
வாரிசு அரசியலுக்கு எதிராக திமுகவிலிருந்து பிரிந்த வைகோ, மதிமுகவை தொடங்கிய காலம் தொட்டே பயணித்தவர் மல்லை சத்யா. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்ற பெரிய பொறுப்பில் இருந்தவர். கட்சியில் வைகோவின் மகனான துரை வைகோவின் செல்வாக்கை விரும்பாத மல்லை சத்யா, அதே வாரிசு அரசியலை காரணம் காட்டி போர்க்கொடி உயர்த்தினார். தொடக்கத்தில் இருதரப்புக்கும் இடையே சமாதானம் பேசிய வைகோ, ஒருகட்டத்தில் மல்லை சத்யாவுக்கு விடை கொடுக்க முடிவெடுத்தார்.
”விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததுபோல் மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்துவிட்டார்” என்ற கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார் வைகோ. ”மூன்று முறை வைகோவின் உயிரைக் காப்பாற்றிய தனக்கு துரோகிப் பட்டமா” என அதிர்ந்த மல்லை சத்யா, ஊடக பேட்டிகளில் தேம்பித்தேம்பி அழுதார். அதேநேரத்தில், மிக விரைவில் மாற்றி மாற்றி வைகோவும், சத்யாவும் சாடிக்கொண்டனர். இந்த அனல் ஓயாத நிலையில், உட்கட்சியில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தன்னுடைய ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார் மல்லை சத்யா. தொடர்ந்து, முக்கியமான காலகட்டங்களில் வைகோ எடுத்த முடிவுகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் மல்லை சத்யா.
கட்சியில் இருந்து நீக்கத்திற்கு விளக்கமளித்த மல்லை சத்யா
இதனையடுத்து, கட்சிப் பொறுப்பில் இருந்து மல்லை சத்யாவை தற்காலிமாக நீக்கிய வைகோ, 15 நாட்களில் அவர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் கடிதம் அனுப்பினார். இதற்கு விளக்கமளித்து பதில் அனுப்பிய மல்லை சத்யா, ”ஒரே நாளில் விளக்க கடிதமும் கட்சியில் இருந்து நீக்குவது குறித்து நடவடிக்கையும் எடுக்க முடியுமா? என்னுடைய விளக்கத்தை பெறாமலேயே தற்காலிக நீக்கம் செய்திருக்கிறீர்கள். இது ஜனநாயக படுகொலை அல்லவா? மரண தண்டனை கைதிக்குக்கூட தண்டனையை நிறைவேற்றும் முன்கால அவகாசம் வழங்கப்படும். ஆனால் என் பொருட்டு அந்த அவகாசம் தர ஏன் தங்களுக்கு மனம் வரவில்லை. இந்த நடவடிக்கைக்கு பின்னால் உங்கள் மகன் துரை வைகோ இருக்கின்றார் என்பதுதானே உண்மை. நான் துரோகியா? கட்சி கட்டுப்பாட்டை மீறினேனா? துரை வைகோவை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. உங்கள் மீது எவ்வளவு அவதூறுகள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது, எதையும் நாங்கள் நம்பாமல் கண்மூடித்தனமாக வாழ்வது என்றாலும் வீழ்வது என்றாலும் வைகோ ஒருவருக்காகவே என்று உங்களைப் பின்பற்றி வந்தோம். ஆனால் நீங்கள் எங்களைப் பற்றி யாராவது புறம் பேசினால் அதை நம்புவீர்கள். 32 ஆண்டுகளாக எங்கள் உழைப்பை உறிஞ்சி சக்கையாக தூக்கி எறிய துடிக்கும் உங்கள் பூர்ஷ்வா அரசியலை நாடு பார்க்கிறது. அதற்கான விலையை நிச்சயம் நாட்டு மக்கள் உங்களுக்கு வழங்கியே தீருவார்கள்” என அதில் தெரிவித்திருந்தார்.
நிரந்தரமாக நீக்கப்பட்ட மல்லை சத்யா!
ஆனால், அந்த விளக்கத்தில் திருப்தி இல்லை எனக்கூறி மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்டு உள்ள அறிக்கையில், ‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு மல்லை சத்யாவுக்கு கடிதம் அனுப்பி இருந்த நிலையில், அந்த கடிதத்துக்கு பதில் அறிவிப்பில் குற்றச்சாட்டுகளை அவர் மறுக்கவும் இல்லை, விளக்கமும் அளிக்கவில்லை. எனவே, மதிமுகவின் கொள்கை, குறிக்கோள், நன்மதிப்பு, ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். மேலும், மல்லை சத்யா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. கட்சிக்கு விரோதம் செய்ததன் அடிப்படையில் நடவடிக்கையில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட விதிகள் விதி 19, பிரிவு- 5, விதி 19, பிரிவு- 12, விதி 35, பிரிவு- 14, விதி 35 பிரிவு 15, விதி 35, பிரிவு 14- இன் படி துணை பொதுச் செயலாளர் உள்ளிட்ட கழகத்தின் அடிப்படை உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்படுகிறார்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மல்லை சத்யாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
இந்நிலையில், மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டது குறித்து பேசிய மல்லை சத்யா, ”ஒரு தலைவராக வைகோ தோற்றுவிட்டார். என் மீதான நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான். துரை வைகோ வருகைக்குப்பின் மதிமுக பின்னடைவை சந்தித்துள்ளது. தனது மகன் துரை வைகோ குறித்தே வைகோ சிந்திக்கிறார். ஆதரவாளர்களை அடுத்த வாரம் சந்தித்து ஜனநாயகபூர்வமாக பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட திருப்பூர் துரைசாமி, நாஞ்சில் சம்பத், தேவதாஸ், டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை நடத்திய மல்லை சத்யா, செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் அன்று அடுத்தகட்ட முடிவை அறிவிக்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அன்றைய தினம் காஞ்சிபுரத்தில், அண்ணா பிறந்த நாள் மாநாடு என்ற பெயரில் பெரும் நிகழ்ச்சிக்கான திட்டமிடலில் ஈடுபட்டுள்ள மல்லை சத்யா, உள்ளபடி புதிய கட்சியை ஆரம்பிக்கும் ஆலோசனையில் இருக்கிறார். ஆகையால், புதிய கட்சிக்கான அறிவிப்புடன் கொடியையும் அறிமுகப்படுத்துவார் என்று சொல்லப்படுகிறது.