புதிய கட்சி தொடங்கும் மல்லை சத்யா.. காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்த நாள் அன்று அறிவிப்பு?
மூன்று தசாப்த உறவு எனும் நீண்டதொடர்புடைய மதிமுக உடனான பயணத்தை முடித்துக்கொள்ளும் நிலையில் இருக்கிறார் மல்லை சத்யா. அடுத்தது என்ன புதிய கட்சிதான் என்கிறார்கள். இதுகுறித்த முழுக் கதையை பெருஞ்செய்தியில் பார்ப்போம்.
கருத்து முரண், சமாதானம், கைகோர்ப்பு மீண்டும் பிரிவு-பிளவு கண்ணீர் என கடந்த சில மாதங்களாக அரசியல் களத்தில் பேசுபொருளாக இருந்து வருபவர்களில் ஒருவர் மல்லை சத்யா. வாரிசு அரசியலுக்கு எதிராக திமுகவிலிருந்து பிரிந்த வைகோ, மதிமுகவை தொடங்கிய காலம் தொட்டு பயணித்தவர் மல்லை சத்யா. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்ற பெரிய பொறுப்பில் இருந்தவர். கட்சியில் வைகோவின் மகனான துரை வைகோவின் செல்வாக்கை விரும்பாத மல்லை சத்யா, அதே வாரிசு அரசியலை காரணம் காட்டி போர்க்கொடி உயர்த்தினார். தொடக்கத்தில் இருதரப்புக்கும் இடையே சமாதானம் பேசிய வைகோ, ஒருகட்டத்தில் மல்லை சத்யாவுக்கு விடை கொடுக்க முடிவெடுத்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததுபோல் மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்ற கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார் வைகோ. மூன்று முறை வைகோவின் உயிரைக் காப்பாற்றிய தனக்கு துரோகிப் பட்டமா என அதிர்ந்த மல்லை சத்யா, ஊடக பேட்டிகளில் தேம்பித்தேம்பி அழுதார். அதேநேரத்தில், மிக விரைவில் மாற்றி மாற்றி வைகோவும், சத்யாவும் சாடிக்கொண்டனர்.
இந்த அனல் ஓயாத நிலையில், உட்கட்சியில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தன்னுடைய ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார் மல்லை சத்யா. தொடர்ந்து, முக்கியமான காலகட்டங்களில் வைகோ எடுத்த முடிவுகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் மல்லை சத்யா. இதனையடுத்து, கட்சிப் பொறுப்பில் இருந்து மல்லை சத்யாவை தற்காலிமாக நீக்கிய வைகோ, 15 நாட்களில் அவர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் கடிதம் அனுப்பினார்.
ஆக,இனி மதிமுகவில் மீண்டும் கலக்க மல்லை சத்யாவுக்கு வாய்ப்பில்லை என்பது தெளிவானது. இதன் தொடர்ச்சியாக ஏற்கெனவே மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட திருப்பூர் துரைசாமி, நாஞ்சில் சம்பத், தேவதாஸ், டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை நடத்திய மல்லை சத்யா, செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் அன்று அடுத்தகட்ட முடிவை அறிவிக்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அன்றைய தினம் காஞ்சிபுரத்தில், அண்ணா பிறந்த நாள் மாநாடு என்ற பெயரில் பெரும் நிகழ்ச்சிக்கான திட்டமிடலில் ஈடுபட்டுள்ள மல்லை சத்யா, உள்ளபடி புதிய கட்சியை ஆரம்பிக்கும் ஆலோசனையில் இருக்கிறார். ஆகையால், புதிய கட்சிக்கான அறிவிப்புடன் கொடியையும் அறிமுகப்படுத்துவார் என்று சொல்லப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மெகா கூட்டணியை அமைக்கும் பணியில் திமுக, அதிமுக, தவெக மூன்று கட்சிகளும் முஸ்தீபில் உள்ள சூழலில், யாருடன் அணி கோப்பார் மல்லை சத்யா; மதிமுகவின் எதிர்வினை இதற்கு எப்படியிருக்கும் என்ற கேள்வி உருவாகியுள்ளது.