மதுராந்தகம் இடைத்தேர்தல் - சுடுகாட்டுக்கே பாதை இல்லை! வெடிக்கும் மயானப் பிரச்சினை
சின்ன வெண்மணி, பெருக்கருணை, மாம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் பொது மயான நிலங்கள் ஆக்கிரமிப்பு, பாதை இல்லாமை, திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளின் ஓரங்களில் உடல் அடக்கம் போன்ற அவலங்கள் நீடிக்க, மக்கள் தீர்வு தரும் கட்சிகளுக்கே வாக்கு அளிப்போம் என எச்சரிக்கின்றனர்.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ளது. தொகுதியின் பல்வேறு பகுதிகளில் எழுந்துள்ள சுடுகாடு மற்றும் மயானப் பாதைகள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணும் கட்சிகளுக்கே வாக்கு என மக்கள் கூறுகின்றனர். இதுதொடர்பான செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொது மயான நிலங்கள் மற்றும் அவற்றுக்குச் செல்லும் பாதைகள் பல இடங்களில் தனி நபர்களாலும், வணிகரீதியாகவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
பல கிராமங்களில் சுடுகாட்டுக்குச் செல்ல முறையான சாலை வசதியோ பாதையோ இல்லை. குறிப்பாக, சின்ன வெண்மணி கிராமத்தில் சுடுகாடு இருந்தாலும், அதற்குச் செல்வதற்கு முறையான பாதை இல்லை. மதுராந்தகம் அருகே உள்ள பெருக்கருணை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் முறையான மயான வசதி கோரி கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து போராடிவருகின்றனர்.
அரசு நிலத்தில் உடலை அடக்கம் செய்ய முயலும்போது தகராறு ஏற்படுவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மதுராந்தகம் ஒன்றியம் மாம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் திறந்தவெளி அல்லது நீர்நிலைகளின் ஓரங்களை மயானமாக பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மயானப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நவீன எரிவாயு தகன மேடைகள் அமைக்க அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்றும் தொகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

