மதுரை | வைகை ஆற்றில் மூழ்கிய மாணவன் உயிரிழப்பு - மற்றொரு மாணவன் மருத்துவமனையில் அனுமதி
செய்தியாளர்: மணிகண்டபிரபு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்தவர் ஜெயவசீகரன் (16). இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம்; வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில், தனது சொந்த ஊரான சோழவந்தானில் உள்ள வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வை காண குடும்பத்துடன் வந்த மாணவன் ஜெயவசீகரன், வைகை ஆற்றில் இறங்கி குளித்துள்ளார்.
அப்போது அவரை நீர் இழுத்துச் சென்றதை அடுத்து சோழவந்தான் தீயணைப்புத் துறையினர், அவரை தேடும் பணியில் ஈடுபட்டு சடலமாக மீட்டனர். அதனை தொடர்ந்து அவரது உடல் சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சோழவந்தான் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
அதேபோன்று சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு தேர்வெழுதியுள்ள அய்யனார் (17) என்ற மாணவனும் சாமி கும்பிட வந்துள்ளார். அப்போது வைகை ஆற்றில் குளித்துள்ளார், அவரும் நீரில் மூழ்கி உயிருக்கு போராடிய போது அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டனர், அதனை தொடர்ந்து அவர் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.