மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரயில்வே பெண் காவலர் ஜெயலெட்சுமி. இவர் தனது கணவர் சுப்புராஜ் மற்றும் பவித்ரா (11), காளிமுத்து (9) ஆகிய இரு குழந்தைகளுடன் மதுரை திருப்பாலை பகுதியில் வசித்து வந்தார். மதுரை ரயில்வே போலீசில் பணிபுரிந்த ஜெயலட்சுமி, கடந்த 20 நாட்களாக தேனூரில் உள்ள தாய் வீட்டில் தனது இரண்டு குழந்தைகளுடன் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை, தேனூர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தனது இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், “சமீக காலமாக கடும் மன அழுத்தம் காரணமாக காவல்துறையில் தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு காவல்துறையில் பணிபுரிவர்களுக்கு மன அழுத்தத்திற்கான சிகிச்சை மனநல ஆலோசனைகள் ஆகியவற்றை வழங்க வேண்டும். வாரம் தோறும் விடுமுறை அளித்து அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்தனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.