பிரதமர் மோடியே பாராட்டிய ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில்...
இனிக்க இனிக்க பேசும் முதல்வர்:
ஆட்சியில் அமர வைத்த அரசு ஊழியர்களுக்கே அல்வா கொடுத்து ஏமாற்றும் வேலையை திமுக செய்தது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் என அனைத்து பணியாளர்களையும் ஏமாற்றி தற்போது போராட்டம் நடத்துகின்றனர். இனிக்க இனிக்க பேசும் முதல்வர் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை ஏமாற்றும் வேலையை செய்கின்றனர். முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் தேர்தலில் தனித்து நிற்க முடியுமா?
திமுகவிற்கு ஆதவாக தான் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது:
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் மட்டும் கொதித்துப் பேசுகிறார். நீங்க கூட்டணி வைத்தால் மட்டும் இனிக்கும். கூடா நட்பு கேடில் முடியும் என உங்க அப்பாவே காங்கிரஸ் கட்சி குறித்து பேசியுள்ளார். தமிழ்நாட்டில் நடக்கும் அக்கிரமங்களுக்கும் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை மக்களுக்கு ஆதரவாகவும்., ஆட்சி எதிராகவும் குரல் கொடுத்து வருகிறதா?. திமுகவிற்கு ஆதரவாகத்தான் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது.
முதல்வர் மக்களை பற்றி சிந்திப்பதே இல்லை. எப்போதும் நடிப்பு நடிப்பு என்ற சிந்தனையிலே உள்ளார். காலை ஒரு சூட்டிங், மாலை ஒரு சூட்டிங், மறுநாள் மீண்டும் சூட்டிங் என ஆட்சி நடத்தி வருகிறார். சட்டமன்றத்தில் 12 மணி நேர வேலை சட்டத்தை நிறைவேற்ற திமுக துடித்த போது குரல் கொடுத்த ஒரே கட்சி அதிமுக. எங்களின் எதிர்ப்பால் தான் அந்த சட்ட மசோதாவை நிறைவேற்றாமல் ஒத்தி மட்டுமே வைத்துள்ளனர்.
பிடி.ராஜன் குடும்பத்தை திமுக அசிங்கப்படுத்தி உள்ளது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இப்போது போராட்ட குணமே இல்லை. தொழிலாளர்களோடு அவர்களுக்கான இடைவெளி அதிகமாகிவிட்டது. ஏதோ நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் என மே தின கூட்டத்தை நடத்திக் கொண்டுள்ளனர். தற்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜனே தனக்கு பதவி வேண்டாம் என்ற நிலையில் உள்ளார். திமுகவை உருவாக்கிய பிடி.ராஜன் குடும்பத்தை திமுக அசிங்கப்படுத்தி உள்ளது.
திமுகவில் உள்ள அனைத்து அமைச்சர்களுமே ஜாமீன் அமைச்சர்கள் தான்:
ஆடியோவில் உண்மையை சொன்ன பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு ஏன் இந்த தண்டனை. ஆட்சியில் பொறுப்பேற்றதும் ஆகா ஓகோ என பழனிவேல் தியாகராஜனை புகழ்ந்த முதல்வர், ஆடியோ வந்த பின்பு தண்டனை கொடுப்பது போல இலாகாவை மாற்றி அசிங்கப்படுத்திவிட்டார். இதற்கெல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும். திமுகவில் உள்ள அனைத்து அமைச்சர்களுமே ஜாமீன் அமைச்சர்கள் தான்.
அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் பொன்முடி என்றைக்கோ ஜெயிலுக்கு போயிருப்பார்:
திமுக அமைச்சர்களை பொறுத்த வரையில் கலெக்ஷன், கரப்சன் தான். அமைச்சர் பொன்முடி தொடர்ந்து பெண்களை இழிந்து பேசுவதும், தாழ்த்தப்பட்ட கவுன்சிலரை அவமரியாதை செய்வதும், பெண்களை ஓசி என கூறியதற்கு இன்றைக்கு எங்க அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் பொன்முடி என்றைக்கோ ஜெயிலுக்கு போயிருப்பார். எல்லா அமைச்சர்களும் இனி கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நடக்கப் போகிறார்கள். இந்த நிலையில் தான் 234 தொகுதியிலும் நாங்கள் ஜெயிக்கப்போகிறோம் என என முதல்வர் பேசிக் கொண்டுள்ளார்.
பிரதமரே பாராட்டிய ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான்:
இனிமேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. நாடு தாங்காது. இந்திய முதல்வர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என நாட்டின் பிரதமரே பாராட்டிய ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். உண்மையான விடுதலை, விடியலை வரும் 2026ல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் உழைப்பாளர் தினத்தில் கொண்டாடுவோம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.