மதுரை | முதல்வர் முக.ஸ்டாலின் பிறந்தநாள் ஜல்லிக்கட்டுப் போட்டி - காளை முட்டி இளைஞர் பலி
செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகில் உள்ள கீழக்கரை கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் உள்ளது. இந்த அரங்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு மேலூர் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் ிஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் மூர்த்தி மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். 1000 காளைகளும் 600 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்ட இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், சோழவந்தான் கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் மகேஷ்பாண்டி என்ற மாடுபிடி வீரர் களத்தில் மாடி பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜல்லிக்கட்டு காளை மார்பு பகுதியில் முட்டியதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.